மின்சாரத்தால் பிறந்த உயிர்கள்

இந்த பூமியில் உயிர்கள் எப்படித் தோன்றி இருக்கும் என்பது பற்றி மில்லர் யூரே மேற்கொண்ட ஆய்வு மிக முக்கியமானது. இந்த ஆய்வில் மின்சாரத்தைக் காற்று, தண்ணீர் ஆகியவை அடங்கிய கலத்திற்குள் அனுப்பிய போது, அமினோ அமிலம் உள்ளிட்ட சில உயிரியல் மூலக்கூறுகள் உருவாயின.

இதிலிருந்து மின்னல்கள் மூலமாக உயிர்கள் உற்பத்தியாகி இருக்கலாம் என்கின்ற கருத்து சொல்லப்பட்டது. ஆனால், இதை ஏற்றுக் கொள்வதில் பல பிரச்னைகள் எழுந்தன.

அமெரிக்க ஸ்டான் போர்ட் பல்கலை ஆய்வாளர்கள் உயிரினங்கள் உற்பத்தியாவதற்குத் தனித்த ஒரு மின்னல் காரணமாக இருக்காது, மாறாக 'மைக்ரோ லைட்னிங்' காரணமாக இருக்கலாம் என்று கூறி இருக்கின்றனர். காற்றில் தெளிக்கப்படும் போது தண்ணீர் துளிகளுக்கு இடையே ஒரு மின்னோட்டம் உருவாகிறது. இதுவே மைக்ரோ லைட்னிங் எனப்படுகிறது.

மில்லர் யூரே ஆய்வைச் சற்றே மாறுபட்ட வகையில் விஞ்ஞானிகள் செய்து பார்த்தனர். ஒரு கலத்தில் பூமியின் வளிமண்டலத்தில் இருக்கும் அத்தனை வாயுக்களையும் நிரப்பினர். இதற்குள் நீர்த் துளிகளைத் தெளித்தனர்.

அப்போது பெரிய நீர்த் துளிகள் நேர்மறை மின்ணூ ட்டத்தையும் சிறிய துளிகள் எதிர்மறை மின்ணூட்டத்தையும் பெற்றன. இவை நெருங்கும் போது இவற்றுக்கிடையே மிகச் சிறியளவில் மின்சாரம் (மைக்ரோ லைட்னிங்) உற்பத்தியானது.

இது சாதாரண கண்களுக்குத் தெரியாது என்பதால், உயர் தொழில்நுட்பம் உடைய கேமராக்களைக் கொண்டு பதிவு செய்தனர். இந்த மின்சாரம் காற்றில் படும்போது, உயிர் மூலக்கூறுகள் உற்பத்தியாயின.

எனவே இதே போலத் தான் உலகின் பல்வேறு இடங்களில் நீர்த் துளிகளிடையேயான மின்சாரத்தால் உயிர்கள் உற்பத்தியாகி இருக்க வேண்டும் என்று இந்த ஆய்வு கூறுகிறது.

Advertisement