பட்டா உள்ளிட்ட நில ஆவணங்களில் 'ஆதார்' இணைக்க புதிய 'சாப்ட்வேர்'

சென்னை : பட்டா உள்ளிட்ட நில ஆவணங்களுடன், 'ஆதார்' எண்ணை இணைப்பதற்காக, புதிய, 'சாப்ட்வேர்' உருவாக்கப்பட்டு வருவதாக, வருவாய்த் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
வங்கி கணக்கு, வருமான வரி கணக்கு எண், ஓட்டுநர் உரிமம், வாகன பதிவு புத்தகம் என, பல்வேறு ஆவணங்களுடன் ஆதார் எண் இணைக்கப்பட்டு வருகிறது. இந்த வகையில், வாக்காளர் அடையாள அட்டை உள்ளிட்ட ஆவணங்களில், ஆதார் எண்ணை இணைப்பதற்கான ஆலோசனை நடந்து வருகிறது.
அறிவுறுத்தல்
இந்நிலையில், வீடு, மனை தொடர்பான கிரைய பத்திரங்களை பதிவு செய்யும்போது, ஆதார் அடிப்படையிலான அடையாள ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது.
பத்திரங்களில் ஆதார் எண் குறிப்பிடுவது அவசியமாகிறது. இதே போன்று, கட்டுமான திட்ட அனுமதி பெறுவது, வீடு ஒதுக்கீடு பெறுவது போன்ற விஷயங்களிலும், ஆதார் அடையாள சான்றாக பயன்படுத்தப்படுகிறது.
ஆதார் அடிப்படையில் அடையாள ஆய்வு மேற்கொள்ளப்படுவதால், சொத்து விற்பனையில் ஆள்மாறாட்டத்தை தடுக்க முடியும் என்று கூறப்படுகிறது.
இந்நிலையில், நாடு முழுதும் நில ஆவணங்கள், 'டிஜிட்டல்' முறைக்கு மாற்றும் பணிகளில் ஒரு பகுதியாக, ஆதார் எண்ணை இணைக்க, மத்திய அரசு, மாநிலங்களை அறிவுறுத்தி உள்ளது.
இதுகுறித்து, வருவாய்த் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:
பட்டா உள்ளிட்ட நில ஆவணங்களில், ஆதார் எண்ணை இணைப்பதால், நடைமுறையில் எழும் பல்வேறு குழப்பங்களை தவிர்க்கலாம். குறிப்பாக, ஒரு நபர் பெயரில் எவ்வளவு சொத்து உள்ளது என்பது குறித்த விபரங்களை எளிதாக அறியலாம்.
சொத்து பரிவர்த்தனை தொடர்பான நடவடிக்கைகளை, எளிதாக முடிக்கவும் வாய்ப்பு ஏற்படும். ஆதார் எண்ணை, சொத்து தொடர்பான ஆவணங்களில் இணைப்பதற்கு, புதிதாக 'சாப்ட்வேர்' தயாரிக்க வேண்டும்.
மென்பொருள்
இப்பணிகளை மேற்கொள்ள, 9.67 கோடி ரூபாயை தமிழகத்துக்கு வழங்க மத்திய அரசு சம்மதித்துள்ளது. அதில், தற்போது வரை, 2.41 கோடி ரூபாய் விடுவிக்கப்பட்டுள்ளது. இதை பயன்படுத்தி, சென்னையில் உள்ள தேசிய தகவலியல் மையம் வாயிலாக, மென்பொருள் தயாரிக்கப்பட்டு வருகிறது.
விரைவில், இந்த சாப்ட்வேர் பயன்பாட்டுக்கு வரும். அப்போது, பட்டா உள்ளிட்ட ஆவணங்கள் உருவாகும் நிலையிலேயே, அதில் உரிமையாளரின் ஆதார் எண் இணைக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
மேலும்
-
ஆப்கன் தலிபான்கள் கஸ்டடியில் இருந்த அமெரிக்கப் பெண் விடுதலை
-
நாக்பூரில் ஆர்.எஸ்.எஸ்., நிறுவனர் சிலைக்கு பிரதமர் மோடி மரியாதை
-
காற்று மாசு மூலம் பரவும் நோய்கள்; 2040க்குள் 50 சதவீதம் தடுக்க உலக நாடுகள் உறுதி
-
பல் வரிசை சீரமைப்பு சிகிச்சையில் விபரீதம்: நாக்கை துளைத்த டாக்டர் மீது இளம்பெண் போலீசில் புகார்
-
சென்னை மக்களுக்கு நல்ல செய்தி: பூண்டி வந்தது கிருஷ்ணா நதி நீர்
-
கசிந்த அமெரிக்க ராணுவ ரகசியம்; யார் மீது நடவடிக்கை? டிரம்ப் பதில்