பல் வரிசை சீரமைப்பு சிகிச்சையில் விபரீதம்: நாக்கை துளைத்த டாக்டர் மீது இளம்பெண் போலீசில் புகார்

7


பாலக்காடு: பல்வரிசை சீரமைப்பு சிகிச்சையின் போது பெண்ணின் நாக்கில் காயம் ஏற்படுத்திய பல் டாக்டர் மீது பாலக்காடு போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

கேரள மாநிலம் பாலக்காட்டைச் சேர்ந்த 21 வயது பெண், சீரற்ற பல்வரிசை காரணமாக பல் டாக்டரிடம் சிகிச்சைக்கு சென்றார். அவரது பற்களை பரிசோதித்த டாக்டர், பல் வரிசையை சீரமைக்க பற்களில் துளையிட்டு கம்பி கட்ட வேண்டும் என்று கூறினார்.

அதை அந்தப் பெண்ணும் ஏற்றுக் கொண்டார்.



இதன்படி டாக்டர் பற்களில் துளையிட்டார். அப்போது துளையிடுவதில் டாக்டர் செய்த சிறு தவறு காரணமாக அந்தப் பெண்ணின் நாக்கில் காயம் ஏற்பட்டது. கடும் அதிர்ச்சி அடைந்த அந்தப் பெண் டாக்டரின் அலட்சியமே இதற்கு காரணம் என்று குற்றம் சாட்டி போலீசில் புகார் அளித்தார்.


பாலக்காடு மாவட்டம் ஆலத்தூர் போலீசார், தனியார் பல் மருத்துவமனையான ஆலத்தூர் டென்டல் கேர் மீதும், டாக்டர் மீதும் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.பாரதிய நியாய சன்ஹிதாவின் பிரிவு 125(a) இன் கீழ் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். பாதிக்கப்பட்ட பெண் கூறியதாவது:

மார்ச் 22ம் தேதி சிகிச்சையின் போது, தவறாக துளையிட்டதால் நாக்கின் இடது பக்கம் கடுமையான காயம் ஏற்பட்டது. வலி இருப்பதாகக் கூறியபோது, ​​பல் டாக்டர் வலி நிவாரணி மருந்தை பரிந்துரைத்து ஓய்வெடுக்க அறிவுறுத்தினார். இருப்பினும், வலி ​​தாங்க முடியாததால், பாலக்காடு மாவட்ட மருத்துவமனையில் சிகிச்சை பெற்றேன். சிகிச்சைக்குப் பிறகு, காயம் குணமடையத் தொடங்கியது.



வேறு எந்த நோயாளியும் இதேபோன்ற சோதனையைச் சந்திக்க கூடாது. எனவே தான் போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தேன். பல் மருத்துவமனை மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மாவட்ட மருத்துவ அதிகாரியிடம் புகார் அளித்தேன். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement