நாக்பூரில் ஆர்.எஸ்.எஸ்., நிறுவனர் சிலைக்கு பிரதமர் மோடி மரியாதை

மும்பை: நாக்பூர் சென்றுள்ள பிரதமர் மோடி, ஆர்.எஸ்.எஸ்., அமைப்பின் நிறுவனர் கேசவ் பலிராம் ஹெட்கேவார் சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
பல்வேறு அரசு திட்டங்களை தொடங்கி வைப்பதற்காக, மஹாராஷ்டிரா மாநிலம் நாக்பூருக்கு பிரதமர் மோடி சென்றார். விமான நிலையத்தில் பிரதமர் மோடியை, மத்திய அமைச்சர் நிதின் கட்கரி, மஹாராஷ்டிரா முதல்வர் பட்னவிஸ் உள்ளிட்டோர் வரவேற்றனர்.
நாக்பூரில் ஆர்.எஸ்.எஸ் நிறுவனர் கேசவ் பலிராம் ஹெட்கேவாருக்கு பிரதமர் மோடி மலர் அஞ்சலி செலுத்தினார். மாதவ் நேத்ராலயா கண் சிகிச்சை மற்றும் ஆராய்ச்சி மையத்தின் புதிய கட்டடத்திற்கு அடிக்கல் நாட்டினார். இங்கு 250 படுக்கைகள், 14 வெளிநோயாளி பிரிவு மற்றும் 14 நவீன ஆபரேசன் தியேட்டர்களுடன் கூடிய மருத்துவமனை கட்டடம் அமைகிறது.
100ம் ஆண்டு நிறைவு
பின்னர் பிரதமர் மோடி பேசியதாவது: ஆர்.எஸ்.எஸ்., நடத்திய நிகழ்ச்சியில் பங்கேற்கும் பாக்கியம் எனக்குக் கிடைத்தது. இந்த ஆண்டு ஆர்.எஸ்.எஸ்., தனது பயணத்தின் 100ம் ஆண்டுகளை நிறைவு செய்கிறது. அடுத்த மாதம் அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்கிய அம்பேத்கரின் பிறந்தநாளும் ஆகும். நவராத்திரி மற்றும் அனைத்து பண்டிகைகளுக்கும் நாட்டு மக்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
நிலநடுக்கம்
நாட்டின் அனைத்து குடிமக்களும் சிறந்த சுகாதார வசதிகளைப் பெறுவதே எங்கள் முன்னுரிமை. ஏழை மற்றும் நடுத்தர குடும்பங்களுக்கு மலிவு விலையில் மருந்துகள் வழங்கப்படுகிறது.
உலகில் எங்கு இயற்கை பேரிடர் ஏற்பட்டாலும், இந்தியா முழு மனதுடன் சேவை செய்ய முன்வருகிறது. இவ்வளவு பெரிய நிலநடுக்கம் மியான்மரைத் தாக்கியுள்ளது. ஆபரேஷன் பிரம்மா திட்டத்தின் குழுவினர் அங்குள்ள மக்களுக்கு உதவ சென்றுள்ளனர்.
மிகப்பெரிய சொத்து
இன்று இந்தியா முன்னேறி வருவதால், அது முழு உலகளாவிய தெற்கின் குரலாகவும் மாறி வருவதை உலகம் காண்கிறது. இன்று இந்தியாவின் மிகப்பெரிய சொத்து நமது இளைஞர்கள். இன்று இந்திய இளைஞர்கள் தன்னம்பிக்கையால் நிறைந்துள்ளனர். தேசத்தைக் கட்டியெழுப்பும் உணர்வை கொண்ட நமது இளைஞர்கள் முன்னேறிச் செல்கிறார்கள். இந்த இளைஞர்கள் 2047ம் ஆண்டுக்குள் வளர்ந்த இந்தியா என்ற இலக்கின் கொடியை ஏந்தியுள்ளனர். இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.
தொடர்ந்து, சோலார் டிபென்ஸ் மற்றும் ஏரோஸ்பேஸில் புதிதாக கட்டப்பட்ட விமான ஓடுதளத்தையும் அவர் திறந்து வைத்தார். ஆர்.எஸ்.எஸ்., நிகழ்ச்சியிலும் பிரதமர் மோடி பங்கேற்றார். அங்கு பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.










மேலும்
-
டாஸ்மாக் ரெய்டுக்கு எதிரான வழக்கை அபராதத்துடன் தள்ளுபடி செய்யணும்: ஐகோர்ட்டில் அமலாக்கத்துறை மனு
-
குளம் தூர் வாரும் பணி துவக்க விழா
-
பெருமைக்குரிய அம்மா
-
பெண்ணுக்கு பாலியல் தொல்லை: பாதிரியாருக்கு ஆயுள் தண்டனை
-
கும்பகோணம் வெற்றிலை, தோவாளை மாணிக்க மாலைக்கு புவிசார் குறியீடு
-
2026ல் மார்ச் 31க்குள் நக்சலிசம் ஒழிக்கப்படும்; அமித்ஷா திட்டவட்டம்