நிலமே இல்லாதவர்களுக்கு புயல் நிவாரண தொகை

கடந்த நவம்பர் மாதம் ஏற்பட்ட பெஞ்சல் புயல் வெள்ளத்தில் விழுப்புரம் மாவட்டம் அதிகளவில் பாதிக்கப்பட்டது. இதே போல் கள்ளக்குறிச்சி, கடலுார் மாவட்டங்களிலும் பயிர் சேதங்கள் ஏற்பட்டது.

இதற்கு தமிழக அரசு சமீபத்தில் நிவாரண உதவித் தொகையை அறிவித்து, விவசாயிகள் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டு வருகிறது. ஆனால், உண்மையிலேயே பயிர் சேதம் ஏற்பட்ட பல விவசாயிகளுக்கு நிவாரணம் கிடைக்கவில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது.

இது ஒருபுறம் இருக்க, நிலம் இல்லாத, விவசாயம் செய்யாத சிலரது வங்கி கணக்கில் நிவாரண தொகை வரவு வைக்கப்பட்டு இருப்பதாகவும் புகார் எழுந்துள்ளது. குறிப்பாக விழுப்புரம் மாவட்டம், கண்டாச்சிபுரம் தாலுகாவில் இது போன்ற குற்றச்சாட்டுகள் அதிகரித்துள்ளன.

பயிர் பாதிப்பு கணக்கை வேளாண் துறையும், வருவாய்த் துறையும் இணைந்து மேற்கொண்டது. இதனை முழுமையாகவும், நேர்மையாகவும் செய்து முடிக்க அதிகாரிகளுக்கு கடுமையான உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது.

இதன் காரணமாக ஆர்.ஐ., - வி.ஏ.ஓ., - துணை வேளாண் அலுவலர், உதவி வேளாண் அலுவலர்கள் அடங்கிய குழுவினர் விவசாயிகளின் மனுவை ஆய்வு செய்து, பயனாளிகளை தேர்வு செய்தனர்.

வங்கி கணக்கு எண், வங்கியின் பெயர் ஐ.எப்.எஸ்.சி., எண், மொபைல் எண், ஆதார் எண், ரேஷன் கார்டு நம்பர் என அனைத்துமே முறையாக பதிவு செய்யப்பட்டது.

இந்நிலையில், தவறு எங்கு நடந்தது என்று தெரியாத அளவிற்கு அப்பாவிகள் பாதிக்கப்பட்டு, அதிகாரம் படைத்தவர்கள் பணப்பலன் அடைந்திருப்பது தற்போது பேசுப் பொருளாகி உள்ளது.

இதனை முழுமையாக ஆய்வு செய்து தவறு எங்கு நடந்தது என்பதை கண்டறிந்து அவர்கள் மீது அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement