தாழ்வாக செல்லும் மின்வடங்கள் வயல்வெளியில் விவசாயிகள் பீதி

மறைமலைநகர் : மறைமலைநகர் நகராட்சி 10வது வார்டு கலிவந்தபட்டு கிராமத்தில், 200க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இந்த கிராமத்தில், விவசாயம் பிரதான தொழில்.

இங்கு 200க்கும் மேற்பட்ட ஏக்கர் பரப்பளவில் நெல் பயிரும், புடலை, கத்தரி உள்ளிட்ட தோட்ட பயிர்களும் பயிரிடப்படுகின்றன.

இந்த கிராமத்தில் உள்ள வயல்வெளிகளுக்கு இலவச மின்சாரம் செல்லும் தடத்தில், பல இடங்களில் மின்வடங்கள் மிகவும் தாழ்வாக செல்கின்றன.

இதனால், வயலுக்குச் செல்லும் விவசாயிகள் அச்சத்துடன் சென்று வருகின்றனர். இதனால், மின்வடங்களை உயரத்தில் அமைக்க வேண்டுமென எதிர்பார்க்கின்றனர்.

இதுகுறித்து அப்பகுதிவாசிகள் கூறியதாவது:

பல ஆண்டுகளாக இந்த பகுதியில் மின்வடங்கள் மிகவும் தாழ்வாக செல்கின்றன. டிராக்டர் வாயிலாக உழவு பணிகள் மேற்கொள்ளும் போது, மின்வடங்கள் உள்ள பகுதிகளில் பணிகள் தாமதமாகின்றன.

அதே போல், அறுவடை காலங்களில் நெல் அறுவடை செய்யும் இயந்திரத்தின் வாயிலாக அறுவடை பணிகள் மேற்கொள்ளும் போது, தனியாக ஆட்களை வைத்து மரக்கொம்புகள் பயன்படுத்தி மின் கம்பிகளை உயர்த்தி வழி ஏற்படுத்தும் அபாய நிலை உள்ளது.

கடந்த ஆண்டு மின் கம்பி அறுந்து விழுந்து, அதை மிதித்த பசு மாடு உயிரிழந்தது.

இதுபோல் அசம்பாவிதம் ஏற்படும் முன், தாழ்வாக செல்லும் மின்வடங்களை உயர்த்தி அமைக்க மின் வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement