மாநில சுயாட்சியை உறுதி செய்ய விரைவில் அறிவிப்பு; சட்டசபையில் முதல்வர் ஸ்டாலின் 'சஸ்பென்ஸ்'

சென்னை: 'மாநில சுயாட்சியை உறுதி செய்து, மாநில உரிமைகளை நிலைநாட்டினால் தான் தமிழ் மொழியை காக்க முடியும். தமிழினத்தை உயர்த்த முடியும் என்று உறுதிபட தெரிவித்து அதற்கான அறிவிப்பை விரைவில் வெளியிடுவேன்' என சட்டசபையில் முதல்வர் ஸ்டாலின் பேசுகையில் தெரிவித்தார்.
இ.பி.எஸ்., டில்லி பயணம்
நம்முடைய எதிர்க்கட்சியின் துணை தலைவர் அதிகாரிகள் மூலம் இருமொழி கொள்கை, மும்மொழி கொள்கை குறித்து மத்திய அரசிடம் இருந்து கடிதம் வந்ததாக கூறியுள்ளார்.
எந்த காரணத்தை கொண்டும் மும்மொழி கொள்கையை ஏற்றுக்கொள்ள மாட்டோம் என்று விளக்கம் அளித்துள்ளோம். இன்று காலையில் கூட, நம்முடைய எதிர்க்கட்சி தலைவர் டில்லிக்கு சென்று இருப்பதாக செய்திகள் வந்து இருக்கிறது.
இதை சொல்லுங்க!
டில்லிக்கு சென்று யாரை சந்திக்க போகிறார் என்ற அந்த செய்தியும் வந்து இருக்கிறது. அப்படி சந்திக்கும் நேரத்தில், இது குறித்து (மும்மொழி கொள்கை) அவர் வலியுறுத்த வேண்டும் என்ற வேண்டுகோளை அவை மூலம் எடுத்து வைக்க கடமைப்பட்டு இருக்கிறேன்.
தமிழக மக்களின் உயர்நிலை கொள்கையான, இருமொழி கொள்கை குறித்து உறுப்பினர்கள் தெரிவித்த கருத்துகளுடன் தமிழக அரசும் உடன்படுகிறது என்பதை மீண்டும் உறுதி செய்கிறேன்.
பணமே வேண்டாம்
தமிழும், ஆங்கிலமும் தான் தமிழகத்தின் இருமொழி கொள்கை. அதில் எந்த மாற்றமும் இல்லை. இருமொழி கொள்கை மட்டுமல்ல, நமது வழி கொள்கையும் இதுதான். ஏன் விழிக்கொள்கையும் இது தான். என் உயிர் கொள்கையில் விட்டு தரமாட்டோம். விட்டு விலகமாட்டோம். ஹிந்தியை ஏற்கவிட்டால் பணம் தரமாட்டோம் என்றாலும், பணமே வேண்டாம்; தாய்மொழி கொள்கையை காப்போம். ரூ.2ஆயிரம் கோடி என்ன? ரூ.10 ஆயிரம் கோடி கொடுத்தாலும் மும்மொழி கொள்கையை ஏற்க மாட்டேன்.
இனப்பிரச்னை
மீண்டும் சொல்கிறேன். இது பண பிரச்னை அல்ல. நமது இனப்பிரச்னை. நாம் தமிழை, தமிழகத்தை, தமிழக இளைய சமுதாயத்தை காக்க கூடிய பிரச்னை. அவர்கள் நிதி தரவில்லை என்பதற்காக, இன மானத்தை அடமானம் வைத்து வெகுமானம் பெறும் கொத்தடிமைகள் அல்ல நாங்கள். தடைக்கற்கள் உண்டு என்றால் அதை உடைத்தெறியும் தடந்தோள் உண்டு என்று சொல்லும் தி.மு.க., ஆட்சி இது.
ஹிந்தி திணிப்பு
மத்திய அரசின் ஹிந்தி திணிப்பு திட்டத்தை இந்த மன்றம் ஏற்க மறுக்கிறது. மாணவர்கள் எண்ணத்திற்கு மதிப்பு அளிக்கும் வகையில், தமிழகத்தில் உள்ள பள்ளிகள், கல்லூரிகள், பல்கலையில் தமிழ், ஆங்கிலம் ஆகிய இரு மொழி கொள்கை நடைமுறையில் இருக்கும். தாய்நிலத்திற்கு தமிழும், உலக தொடர்புக்கு ஆங்கிலமும் என அண்ணாதுரை வடித்த சட்டம் இது.
ஆதிக்க மொழி
இந்த இருமொழி கொள்கை தான் அரை நூற்றாண்டாக தமிழகத்தை வளர்த்து வந்துள்ளது. உலக அளவில் பரவி தமிழக மக்கள் வாழவும், உன்னதமான உயரத்தை அடையவும் வழி வகுத்தது இந்த இருமொழி கொள்கை தான். எந்த மொழிக்கும் எதிரானவர்கள் அல்ல நாம்.
இந்த இருமொழிக் கொள்கையே போதும் என்று சொல்பவர்கள் நாம். யார் எந்த மொழியை கற்பதற்கும் தடையாக நிற்பது இல்லை. தமிழ் மொழியை அழிக்க நினைக்கும் ஆதிக்க மொழிகளை ஏற்க மாட்டோம்.
தின்றுவிடும்
மொழி கொள்கையில் தமிழகம் வகுத்துள்ள பாதையே சரி என்பதில், அண்டை மாநிலங்கள் தொடங்கி, இந்தியாவில் பல மாநிலங்களும் உணர்ந்து வருகிறது. இன்னொரு மொழியை அனுமதித்தால், அது நமது மொழியை மென்று தின்றுவிடும் என்பதை வரலாற்று பூர்வமாக உணர்ந்தவர்கள் என்ற அடிப்படையில் தான் இருமொழி கொள்கையை இறுக்கமாக பிடிக்கிறோம்.
ஹிந்தி மொழி திணிப்பு என்பது ஒரு மொழி திணிப்பு மட்டுமல்ல, பண்பாட்டு அழிப்பாக அமையும் என்பதால் தான், இதில் (இருமொழி கொள்கை) உறுதியாக இருக்கிறோம். மாநிலங்களை தனது கொத்தடிமைகளாக நினைப்பதால் தான், இது போன்ற மொழி திணிப்பும், நிதி அநீதியும் செய்கிறார்கள்.
சஸ்பென்ஸ்
எனவே இந்தியாவின் கூட்டாட்சி தன்மையை காக்கவும், மாநில சுயாட்சியை வென்று எடுக்கவும் சரியான முன்னெடுப்புகளை செய்ய வேண்டிய கட்டாயத்தில் நாம் இருக்கிறோம்.
மாநில சுயாட்சியை உறுதி செய்து, மாநில உரிமைகளை நிலைநாட்டினால் தான் தமிழ் மொழியை காக்க முடியும். தமிழினத்தை உயர்த்த முடியும் என்று உறுதிபட தெரிவித்து அதற்கான அறிவிப்பை விரைவில் வெளியிடுவேன். இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் பேசினார்.












மேலும்
-
மத்திய கல்வி நிறுவனங்களில் உயர்கல்வி வாய்ப்பு
-
''தொழிற்சாலைகளில் பாதுகாப்பு துறையினரின் பணி இன்றியமையாதது''
-
அனைத்து படிப்பையும் அறிந்து கொள்ள அரிய வாய்ப்பு; 'தினமலர்' உயர்கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி இன்றே கடைசி
-
'பெரிய பிரச்னைக்கான சிறிய தீர்வை கண்டறிந்தால் வெற்றி நிச்சயம்'
-
'சாதிக்க வேண்டும் என்ற எண்ணம் இருந்தால் போதும்'
-
'யார் புதுமையாக சிந்திக்கின்றனரோ அவர்களுக்கே வெற்றி கிடைக்கும்'