தேவையில்லாம பேசக்கூடாது: ஐ.நா., கூட்டத்தில் பாகிஸ்தானுக்கு இந்தியா பதிலடி

5

நியூயார்க்: ஐ.நா., கூட்டத்தில் ஜம்மு-காஷ்மீர் பிரச்னையை மீண்டும் எழுப்பியதற்காக பாகிஸ்தானுக்கு இந்தியா பதிலடி கொடுத்தது. மேலும் அண்டை நாடு சட்டவிரோதமாக ஆக்கிரமித்துள்ள பகுதிகளை காலி செய்யுமாறு கேட்டுக் கொண்டது.


ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு கவுன்சில் கூட்டம் நியூயார்க்கில் நடந்தது. இதில் இந்தியா, பாகிஸ்தான் உட்பட பல்வேறு நாடுகளின் பிரதிநிதிகள் தங்கள் தரப்பு கருத்துகளை முன்வைத்தனர்.

பாகிஸ்தான் சார்பில் அந்நாட்டு பிரதமரின் சிறப்பு உதவியாளர் சையது தாரிக் பங்கேற்றார்.
ஜம்மு - காஷ்மீரில் இந்தியா மேற்கொள்ளும் நடவடிக்கைகள் குறித்து அவர் ஆட்சேபனை தெரிவித்தார். இதற்கு பதில் அளிக்கும் வகையில்
நம் நாட்டின் சார்பில் ஐநாவுக்கான இந்திய துாதர் பர்வதனேனி ஹரீஷ் பதில் அளித்து பேசியதாவது:

இந்திய யூனியன் பிரதேசமான ஜம்மு - காஷ்மீர் விவகாரத்தில் பாகிஸ்தான் தேவையற்ற கருத்துக்களை முன்வைக்கிறது. அதன்மூலம் அவர்கள் இந்த மாநாட்டின் மையக்கருத்தை திசை திருப்ப பார்க்கின்றனர்.

இப்படி பேசுவதால், பாகிஸ்தான் உதவியுடன் அரங்கேற்றப்படும் எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை மறைத்துவிட முடியாது.
ஜம்மு - காஷ்மீரின் சில பகுதிகளை பாகிஸ்தான் அபகரித்துள்ளது. அங்கிருந்து அவர்கள் உடனடியாக வெளியேற வேண்டும்.

அன்றும், இன்றும், என்றும் ஜம்மு - காஷ்மீர் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியாக இருக்கிறது. இந்த விவகாரத்தில் பாகிஸ்தான் தேவையின்றி தலையிட வேண்டாம் என அறிவுறுத்துகிறோம். இவ்வாறு அவர் பதிலடி கொடுத்தார்.

Advertisement