வேளாண் பல்கலைக்கு பொறுப்பு துணைவேந்தர்; மாதக்கணக்கில் குறட்டை விட்ட தமிழக அரசு

கோவை; கோவை வேளாண் பல்கலை துணைவேந்தர் பதவிக்காலம் நிறைவடைந்ததால், கவர்னரின் முதன்மை செயலர், பல்கலை பதிவாளரை பொறுப்பு துணைவேந்தராக நியமித்து உத்தரவிட்டுள்ளார்.
பல்கலை விதிப்படி, ஆறு மாதங்களுக்கு முன்பே, துணைவேந்தர் பதவிக்கான மூன்று பேர் கொண்ட தேடல் குழுவை, மாநில அரசு அமைத்திருக்க வேண்டும். ஏப்ரலில் கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலையின் துணைவேந்தர் பணியிடம் காலியாகிறது. இதற்கான தேடுதல் குழு ஏற்கனவே அறிவிக்கப்பட்டு விட்டது.
ஆனால், வேளாண் பல்கலையின் துணைவேந்தருக்கான தேடல் குழுவை, அரசின் வேளாண் துறை செயலர் முன்மொழிந்திருக்க வேண்டும். ஆனால், தமிழக அரசு திட்டமிட்டே தாமதம் செய்து, பதிவாளரை பொறுப்பு துணை வேந்தராக கொண்டு வர முயற்சி செய்வதாக தெரிகிறது என, கல்வியாளர்கள் பலரும் ஏற்கனவே புகார் தெரிவித்திருந்தனர். இதுதொடர்பாக, நம் நாளிதழிலும் செய்தி வெளியாகி இருந்தது.
இந்நிலையில், பொறுப்பு துணைவேந்தர் நியமனம், பல்கலை நிர்வாகத்தை பாதிக்கும் என, கல்வியாளர்கள் பலரும் புகார் தெரிவித்துள்ளனர்.
இதுதொடர்பாக, முன்னாள் துணை வேந்தர் ராமசாமி கூறியதாவது:
வேளாண் கல்வி, மாநில அரசு வரம்புக்கு உட்பட்டது என்பதால், வேளாண் கல்லுாரி, பல்கலைகளை மாநில அரசே தோற்றுவிக்கிறது. ஐ.சி.ஏ.ஆர்., மாதிரி சட்டம், மாநில வேளாண் பல்கலை, கால்நடை பல்கலை, மீன்வள பல்கலைகளின் நிர்வாக அமைப்பு, துணை வேந்தரின் பொறுப்புகள், தகுதிகள் மற்றும் நியமன செயல்முறைகளை வரையறுக்கிறது.
தமிழ்நாடு வேளாண் பல்கலை சட்டம் 1971, பல்கலை செயல்பாடுகளை வரையறுக்கிறது. துணைவேந்தர் பதவி காலியானதும், பதிவாளர், பொறுப்பு துணைவேந்தராக நியமிப்பதையும், இந்த வழிமுறைகள் தான் உறுதி செய்கின்றன.
துணைவேந்தர் பணியிடம் காலியாவதற்கு மூன்று அல்லது ஆறு மாதங்களுக்கு முன்னரே, தேடல் குழுவை நியமித்திருக்க வேண்டும். இவ்விஷயத்தில், மாநில அரசு ஏன் மவுனம் காத்தது என்று தெரியவில்லை. பொறுப்பு துணைவேந்தர் நியமனம் என்பது, பல்கலையின் நிர்வாகத்தை பாதிக்கும். பதிவாளர் என்பவர், பல்கலையின் முதன்மை நிர்வாக அதிகாரி. முக்கிய பொறுப்புகளை அவர் தான் கவனிப்பார்.
பதிவாளர் இடும் உத்தரவுகள், துணைவேந்தரின் உத்தரவுப்படி என இருக்கும். தற்போது, இருவரும் ஒரே நபராக இருந்தால் எப்படி உத்தரவு பிறப்பிப்பது. துணைவேந்தர் உத்தரவையும் ஒருவரே பிறப்பித்து, அதன் அடிப்படையில், பதிவாளருக்கான அதிகாரத்தையும் ஒருவரே செயல்படுத்துவது சிக்கலான விஷயம்.
பல்கலையில் புரிந்துணர்வு ஒப்பந்தங்களை மேற்கொள்ள, உள்நாடு அளவில் பதிவாளருக்கு அதிகாரம் உள்ளது. ஆனால், வெளிநாட்டு ஒப்பந்தங்களை, துணை வேந்தர் தான் மேற்கொள்ள இயலும். பொறுப்பு துணைவேந்தர் என்று கையொப்பமிடுவது முறையாகாது.
வெளிநாட்டு நிதிகளையும் துணைவேந்தர் தான், நிதித்துறையிடம் ஒப்புதல் பெற்று பெற இயலும். இதுபோன்ற சிக்கல்கள் உள்ளன. நல்லவேளையாக, பட்டமளிப்பு விழா நிறைவடைந்து விட்டது. இல்லாவிட்டால், அதுவும் தாமதமாகி இருக்கும்.
தற்போது சட்டசபை கூட்டத்தொடர் நடப்பதால், உடனடியாக அரசு முடிவெடுக்க வாய்ப்பில்லை. கூட்டத்தொடர் நிறைவடைந்ததும், உடனடியாக பல்கலையின் நலன், மாணவர்களின் நலன் கருதி, துணைவேந்தர் நியமனத்துக்கான நடவடிக்கைகளை மாநில அரசு மேற்கொள்ள வேண்டும்.
இவ்வாறு, அவர் தெரிவித்தார்.
மாநிலம் முழுதும் கல்லுாரிகளையும், ஆராய்ச்சி நிலையங்களையும், வேளாண் மையங்களையும் கொண்டுள்ள, மாநில அரசுக்கான வேளாண் ஆராய்ச்சியின் ஒற்றை முகமாக விளங்கும் பெரிய பல்கலையின் தலைமை பதவி இப்படி கேலிக்கூத்தாக்கப்படுவது நல்லதல்ல.
ஐ.சி.ஏ.ஆரிடம் நிதி உதவியை கேட்டு பெறும் திறன் துணைவேந்தருக்கு தான் உண்டு. மற்ற பல்கலைகளின் துணை வேந்தர்கள் நியமிக்கப்படாததற்கு, கவர்னரை கைகாட்டிய தமிழக அரசு, இதற்கு என்ன பதில் சொல்ல போகிறது என்பதே கல்வியாளர்கள் முன்வைக்கும் கேள்வி.
மேலும்
-
ஜவுளிக்கழிவு மறுசுழற்சி செய்யும் முறை: திருப்பூருக்கு பிரதமர் மோடி பாராட்டு
-
ஆட்டிசம் பாதித்த சிறுவனுக்கு அடி: ஆசிரியர் கைது; பள்ளிக்கு சீல்
-
'நான் பழைய மூர்த்தி இல்லை' செல்லுார் ராஜூவுக்கு அமைச்சர் மூர்த்தி பதில்
-
நலத்திட்ட உதவி வழங்கல்
-
ரத்ததான முகாம்
-
இளையான்குடியில் தரமின்றி கட்டப்படும் நுாலக கட்டடம்