ஸ்மார்ட் மீட்டர் டெண்டரில் ரூ.15,568 கோடி முறைகேடு?

பெங்களூரு, : ஸ்மார்ட் மீட்டர் பொருத்தும் டெண்டரில் 15,568 கோடி ரூபாய் முறைகேடு நடந்திருப்பதாக, காங்கிரஸ் அரசு மீது பா.ஜ., குற்றஞ்சாட்டி உள்ளது.
பெங்களூரு, பெங்களூரு ரூரல், சிக்கபல்லாபூர், கோலார், தாவணகெரே, துமகூரு, சித்ரதுர்கா, ராம்நகர் ஆகிய எட்டு மாவட்டங்களுக்கு பெஸ்காம் எனும் பெங்களூரு மின்விநியோகக் கழகம் மின் பகிர்மானம் செய்து வருகிறது.
இந்நிலையில் வீடுகள், கடைகள், கட்டடங்களில் எவ்வளவு மின்சாரம் பயன்படுத்தப்படுகிறது என்பதை துல்லியமாக கணக்கிட்டு, தானாகவே மின்சாரம் வழங்கும் நிறுவனத்திற்கு அனுப்பும், ஸ்மார்ட் மீட்டரை கட்டாயம் பொருத்த வேண்டும் என, தன் எல்லைக்கு உட்பட்ட எட்டு மாவட்டங்களுக்கு பெஸ்காம் அமல்படுத்தியது.
இதற்கான உத்தரவு கடந்த மாதம் 15ம் தேதி பிறப்பிக்கப்பட்டது. ஸ்மார்ட் மீட்டரின் விலை 4,998 ரூபாய். பெஸ்காமின் அறிவிப்புக்கு பொதுமக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது.
கட்டாயமில்லை
இந்நிலையில், பெங்களூரில் உள்ள பா.ஜ., அலுவலகத்தில், அக்கட்சியின் மூத்த எம்.எல்.ஏ., அஸ்வத் நாராயணா நேற்று அளித்த பேட்டி:
கர்நாடக மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் உத்தரவை பெஸ்காம் உள்ளிட்ட மின்சார நிறுவனங்கள் கண்டிப்பாக பின்பற்ற வேண்டும். வீடுகள், கட்டடங்களுக்கு ஸ்மார்ட் மீட்டர் கட்டாயம் என்று ஒழுங்குமுறை ஆணையம் எங்கும் கூறவில்லை.
தற்காலிக மின் இணைப்புகளுக்கு மட்டுமே ஸ்மார்ட் மீட்டரை கட்டாயமாக்க முடியும். ஆனால் நிரந்தர மின் இணைப்புக்கோ அல்லது புதிய இணைப்புக்கோ கட்டாயமாக்க முடியாது. மத்திய மின்சார ஆணையம் விதிகள் கூட ஸ்மார்ட் மீட்டர்கள் கட்டாயம் இல்லை என்று கூறுகிறது.
கர்நாடக பொது கொள்முதல் வெளிப்படை தன்மை சட்டத்தின்படி, ஏல தொகை டெண்டரில் குறிப்பிடப்படவில்லை. டெண்டர் தொகை 6,800 கோடி ரூபாயாக இருந்திருக்க வேண்டும். ஆனால் டெண்டர் தொகையை வெளியிடாமல் டெண்டரை அரசு அழைத்துள்ளது.
அமைச்சர் கைது
ஸ்மார்ட் மீட்டரை தயாரிக்க தெரியாத ஒருவர், டெண்டரில் பங்கேற்றுள்ளார். தகுதியானவர்களை தவிர்த்து ஒன்றும் தெரியாதவர்களுக்கு டெண்டர் கொடுக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் 15,568 கோடி ரூபாய் முறைகேடு நடந்து உள்ளது. இது அரசின் பகல் கொள்ளை.
காங்கிரஸ் ஆட்சியில் இருக்கும் ஹிமாச்சல பிரதேசம், தெலுங்கானாவில் குறைந்த விலையில் ஸ்மார்ட் மீட்டர்கள் பொருத்தப்பட்டு உள்ளன. அங்கு ஒரு ஸ்மார்ட் மீட்டர் விலை 7,740 ரூபாய் தான்.
ஆனால் இங்கு 17,000 ரூபாய் வரை செலவு ஆகிறது. பீஹாரிலும் இதுபோன்று மோசடி நடந்து உள்ளது. ஐ.ஏ.எஸ்., அதிகாரி, அமைச்சர் ஒருவர் கைது செய்யப்பட்டனர்.
ஸ்மார்ட் மீட்டர் பொருத்துவதில் எந்த முறைகேடும் நடக்கவில்லை என்று, மின்சார துறை அதிகாரிகள் கூறுகின்றனர். எங்களிடம் முறைகேடு குறித்து ஆவணம் உள்ளது. அதை வெளியிடுவோம்.
இவ்வாறு அவர் கூறினார்.

மேலும்
-
சம்பளப் பணம் விடுவிக்காதது ஏன்: மத்திய அரசுக்கு முதல்வர் ஸ்டாலின் கேள்வி
-
மாற்றுத்திறனாளி பெண்ணை கற்பழிக்க முயன்றவருக்கு எட்டரை ஆண்டு சிறை
-
கார் விலையை உயர்த்தக்கூடாது: நிறுவனங்களுக்கு டிரம்ப் எச்சரிக்கை
-
சிறுமிக்கு பாலியல் தொல்லை கூலி தொழிலாளி கைது
-
10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 397 மாணவர்கள் 'ஆப்சென்ட்'
-
சோலார் நிறுவனத்தை எதிர்க்கும் மக்கள் மனு