'தமிழகத்தில் வெள்ளம் போல ஓடும் கள்ளச்சாராயம்': தி.மு.க., - எம்.பி.,க்களை கொந்தளிக்க வைத்த தம்பிதுரை

3

ராஜ்யசபாவில் நேற்று நடந்த பேரிடர் மேலாண்மை மசோதா மீதான விவாதத்தின்போது, அ.தி.மு.க., - எம்.பி., தம்பிதுரை பேசியதாவது:


கடந்த 2004ல், தமிழகத்தை சுனாமி பேரலை தாக்கியது. அப்போது முதல்வராக இருந்த ஜெயலலிதா, மக்களை காப்பாற்ற துரிதமாக செயல்பட்டார்.

நிர்வாகத் திறமை



அதன்பின், முதல்வராக பழனிசாமி இருந்தார். அப்போதும், வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. பேரிடர் நிகழும்போதெல்லாம், தன் சிறப்பான நிர்வாகத் திறமையால் பழனிசாமி தமிழக மக்களை காத்தார்.


அந்த சமயத்திலும் மாநில அரசு, மத்திய அரசிடம் நிதி கேட்டது. அதை ஏற்று மத்திய அரசு நிதி வழங்கியது. அது போதுமானதாக இல்லை. ஆனாலும், அதை வைத்து அ.தி.மு.க., ஆட்சிக் காலத்தில் ஏழை மக்களை காப்பாற்ற நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.


ஆனால், அதன்பின் வந்த தி.மு.க., அரசு, சென்னை மாநகருக்கான வெள்ளநீர் வடிகால் திட்டத்திற்காக ரூபாய் 4000 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு பணிகள் நடப்பதாகக் கூறினர். 'சென்னை மாநகருக்குள் இனிமேல் வெள்ளநீர் துளியும் தேங்காது' என்று முதல்வர் ஸ்டாலினே பலமுறை உறுதி கூறினார்.


ஆனால், சென்னை நகரம் வெள்ளநீரால் சூழப்பட்டது. மக்கள் தத்தளித்தனர். அப்படியானால், வெள்ளநீர் வடிகால் திட்டத்திற்காக செலவிடப்பட்டதாகக் கூறப்பட்ட, 4,000 கோடி ரூபாய் என்ன ஆனது? அந்த நிதி, வேறு எங்கோ சென்று விட்டது.


ஒவ்வொரு முறையும் மத்திய அரசை, போதுமான நிதி தரவில்லை என தி.மு.க.,வினர் கடுமையாக விமர்சனம் செய்கின்றனர். ஆட்சியில் உள்ளவர்கள் இப்படி பேசக்கூடாது.

பறிக்கப்படும் உயிர்கள்



மக்களை காப்பாற்ற வேண்டியது, மாநில அரசின் கடமை. அ.தி.மு.க., ஆட்சியில், மற்றவர்களை குறை சொல்லி காலம் ஓட்டவில்லை. மத்திய ஆட்சியில் இருப்போரிடம் சுமூகமான முறையில் பேசி, மாநில தேவைக்கான நிதி பெற்று மக்கள் திட்டங்களுக்கு செலவிடப்பட்டது.


தமிழகத்தில் கள்ளச்சாராயம் வெள்ளம் போல் ஆறாக ஓடுகிறது. இதனால், மக்கள் உயிர் கொத்துக் கொத்தாக பறிக்கப்படுகிறது. உள்துறை அமைச்சர் அமித் ஷா, இந்த விவகாரங்களை கவனிக்க வேண்டும். தமிழகத்தை ஆபத்தில் இருந்து காக்க வேண்டும். அதேபோல, தமிழகத்தில் ஊழலும் பெருக்கெடுத்து ஓடுகிறது. மத்திய அரசு நிதி வேறு திசைகளுக்கு திருப்பப்படு கிறது. அதன் மீதும் கவனம் செலுத்த வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.


தம்பிதுரையின் இந்த பேச்சு முழுமைக்கும் எதிர்ப்பு தெரிவித்து, தி.மு.க., - எம்.பி.,க்கள் கொந்தளித்தனர். இதனால், ராஜ்யசபாவில் பரபரப்பான சூழல் நிலவியது.



- நமது டில்லி நிருபர் -

Advertisement