முதல்வர் இல்லம் ஏப்., 15ல் முற்றுகை

பெங்களூரு : ஊதிய உயர்வு உள்ளிட்ட பல கோரிக்கைகளை வலியுறுத்தி முதல்வர் சித்தராமையாவின் வீட்டை முற்றுகையிடப்போவதாக கே.எஸ்.ஆர்.டி.சி., தொழிற்சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு அறிவித்துள்ளது.

பெங்களூரில் நேற்று கே.எஸ்.ஆர்.டி.சி., தொழிற்சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு சார்பில் ஆலோசனை கூட்டம் நடந்தது.

கே.எஸ்.ஆர்.டி.சி., தொழிலாளர் கூட்டமைப்பு தலைவர் அனந்த சுப்பாராவ், அனைத்து கர்நாடக மாநில சாலைப் போக்குவரத்து ஊழியர் பொதுக்குழு தலைவர் ஜெயதேவராஜ், கர்நாடக மாநில சாலை போக்குவரத்து ஊழியர் கூட்டமைப்பு தலைவர் ரேவப்பா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

கடந்த 2024 ஜன.,1 முதல் திருத்தப்பட்ட சம்பள தொகை; 2020 ஜன., 1, முதல் 2023 பிப்., 28, வரை செலுத்த வேண்டிய சம்பள பாக்கியை உடனடியாக செலுத்துதல்; ஊதிய உயர்வு, தினசரி வழங்கப்படும் படி தொகையை அதிகப்படுத்துதல்; கே.எஸ்.ஆர்.டி.சி.,யில் உள்ளதை போல மற்ற போக்குவரத்து கழகங்களிலும் மருத்துவ வசதிகள் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி ஏப்ரல் 15ம் தேதி காலை 11:00 மணிக்கு, முதல்வர் இல்லத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது.

ஏற்கனவே, போக்குவரத்து தொழிற்சங்கங்கள் கடந்த டிசம்பரில் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் செய்வதாக கூறினார். அரசு தரப்பில் பேச்சு நடத்தப்பட்டது. இதன் பின், வேலை நிறுத்த போராட்டத்தை கைவிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement