பா.ஜ., - எம்.எல்.ஏ.,க்கள் சோமசேகர் ஹெப்பார், ஹரிஷுக்கு மேலிடம் நோட்டீஸ்

பெங்களூரு: கட்சி விவகாரம் குறித்து பொது இடத்தில் பேசியதாக, பா.ஜ., - எம்.எல்.ஏ.,க்கள் சோமசேகர், சிவராம் ஹெப்பார், ஹரிஷ், முன்னாள் அமைச்சர்கள் கட்டா சுப்பிரமணிய நாயுடு, ரேணுகாச்சார்யா ஆகியோருக்கு மேலிடம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

கர்நாடக பா.ஜ., தலைவராக உள்ள விஜயேந்திராவை அப்பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்று, கட்சியின் மூத்த எம்.எல்.ஏ., பசனகவுடா பாட்டீல் எத்னால் தலைமையில் ஒரு அணி உருவாகி உள்ளது. இந்த அணியில் தாவணகெரே ஹரிஹரா எம்.எல்.ஏ., ஹரிஷ் உள்ளார். இவர், விஜயேந்திராவை வெளிப்படையாக விமர்சித்து வருகிறார். கட்சிக்குள் நடக்கும் பிரச்னைகள் குறித்து, பொது இடத்திலும் பேசி இருந்தார்.

இதுபோல விஜயேந்திராவுக்கு ஆதரவாக உள்ள முன்னாள் அமைச்சர்கள் கட்டா சுப்பிரமணிய நாயுடு, ரேணுகாச்சார்யா ஆகியோர், பசனகவுடா பாட்டீல் எத்னால் மற்றும் அவரது அணியினரை, விமர்சித்து பேசி வந்தனர். இது கட்சிக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்தியது.

இது ஒரு பக்கம் இருக்க காங்கிரசில் இருந்து விலகி பா.ஜ.,வில் இணைந்து, இடைத்தேர்தலில் வெற்றி பெற்று அமைச்சர்களாக இருந்த சோமசேகர், சிவராம் ஹெப்பார் ஆகியோர் தனி ரூட்டில் செல்கின்றனர்.

கட்சி சார்பில் நடக்கும் கூட்டங்களில் பங்கேற்க மறுக்கின்றனர். காங்கிரசுக்கு ஆதரவாக செயல்பட்டு வருகின்றனர். கடந்த ஆண்டு பிப்ரவரியில் நடந்த, ராஜ்யசபா தேர்தலில் சோமசேகர் கட்சி மாறி ஓட்டு போட்டார்.

சிவராம் ஹெப்பார் தேர்தலை புறக்கணித்தார். சென்னப்பட்டணா இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளருக்கு ஆதரவாக சோமசேகர் வேலை செய்தார். பா.ஜ., தலைவர்கள், காங்கிரஸ் அரசை விமர்சித்து பேசினால், சோமசேகர் மட்டும் பாராட்டி பேசி வந்தார்

இதனால் இருவர் மீதும் ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, கர்நாடக பாஜ., ஒழுங்கு நடவடிக்கை குழு தலைவர் லிங்கராஜ் பாட்டீல், மேலிடத்திற்கு கடிதம் எழுதி இருந்தார்.

இந்நிலையில் கட்சி விவகாரம் குறித்து பொது இடத்தில் பேசியதற்காக, ரேணுகாச்சார்யா, கட்டா சுப்பிரமணிய நாயுடு, ஹரிஷ் ஆகியோருக்கும், கட்சிக்கு எதிராக செயல்படுவது குறித்து சோமசேகர், சிவராம் ஹெப்பாருக்கும், பா.ஜ., மத்திய ஒழுங்கு நடவடிக்கை குழு தலைவர் ஓம் பதக் நேற்று நோட்டீஸ் அனுப்பினார். 72 மணி நேரத்தில் பதில் அளிக்கும்படி உத்தரவிட்டு உள்ளார்.

Advertisement