கே.ஆர்.எஸ்., அணையின் ஒரு மதகு திடீர் திறப்பு; 24 மணி நேரத்தில் 2,000 கன அடி நீர் வெளியேற்றம்

மாண்டியா, : கே.ஆர்.எஸ்., அணையின் ஒரு மதகு திடீரென திறந்ததால், 24 மணி நேரத்தில், அணையில் இருந்து 2,000 கன அடி தண்ணீர் வெளியேறியது.

மாண்டியா மாவட்டம், ஸ்ரீரங்கபட்டணாவில் கே.ஆர்.எஸ்., அணை உள்ளது. இங்கு தண்ணீர் வெளியேற, பல்வேறு அளவுகளில் 134 தானியங்கி மதகுகள் அமைக்கப்பட்டுள்ளன.

அணையில் நீர்மட்டம் குறிப்பிட்ட அளவு அதிகரித்தால், மதகுகள் தானாக திறந்து, தண்ணீரை வெளியேற்றும் வகையில் வடிவமைக்கப்பட்டு உள்ளது.

இம்மாதம் 24ம் தேதி அதிகாலை, அணையின் 80வது மதகு தானாக திறந்து கொண்டது. அன்றைய தினம் காலையில் பணிக்கு வந்த காவிரி நீர் வாரிய அதிகாரிகள், ஆற்றில் வழக்கத்துக்கு மாறாக தண்ணீர் வெளியேறுவதை பார்த்தனர்.

சந்தேகம் அடைந்த அதிகாரிகள் அணைக்கு சென்று ஆய்வு செய்தபோது, அணையின் 80வது மதகு திறந்திருந்தது. அதிர்ச்சி அடைந்த அவர்கள், உடனடியாக அணையை மூடும் பணியில் ஈடுபட்டனர். பல மணி நேர போராட்டத்துக்கு பின், மதகு மூடப்பட்டது.

மதகு திறந்ததால், 24 மணி நேரத்தில் 2,000 கன அடி தண்ணீர் வெளியேறியதாக அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும், தண்ணீர் அளவு அதிகமானால், அனைத்து மதகுகள் திறந்திருக்கும். ஆனால், 80வது மதகு மட்டும் எப்படி திறந்தது என்பது தெரியவில்லை.

அதிகாரி ஒருவரின் அலட்சியத்தால் மதகு திறந்திருக்கலாம் என்று சந்தேகம் எழுந்துள்ளது.

தகவல் அறிந்த உயர் அதிகாரிகள், அணையை ஆய்வு செய்தனர். மதகு திறந்தது தொடர்பாக விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்கும்படி உத்தரவிடப்பட்டுள்ளது.

அணையின் மொத்த கொள்ளளவு 49.45 டி.எம்.சி., தற்போது அணையில் 28.33 டி.எம்.சி., தண்ணீர் இருப்பு உள்ளது.

Advertisement