ராகுலுக்கு அறிவுரை ம.ஜ.த., நிகில் கிண்டல்

பெங்களூரு : ''லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் உட்பட அக்கட்சி தலைவர்களுக்கு, அறிவார்ந்த நபர்கள் யாராவது அரசியலமைப்பு சட்டம் குறித்து பாடம் எடுக்க வேண்டும்,'' என, ம.ஜ.த., இளைஞர் அணி தலைவர் நிகில் கிண்டல் அடித்துள்ளார்.

பெங்களூரில் நேற்று அவர் அளித்த பேட்டி:

பிரதமர் மோடி, அரசியலமைப்பு சட்டத்தை மாற்றுவார் என காங்., தலைவர்கள் பொய் பிரசாரத்தில் ஈடுபட்டனர். தற்போது, துணை முதல்வர் சிவகுமாரே அரசியலமைப்பை மாற்ற போவதாக கூறுகிறார்.

லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் உட்பட அக்கட்சி தலைவர்களுக்கு அறிவார்ந்த நபர்கள் யாராவது அரசியலமைப்பு சட்டத்தை பற்றி பாடம் எடுக்க வேண்டும்.

ஸ்மார்ட் மீட்டர் டெண்டரிலும் ஊழல் நடந்து உள்ளது. மத்திய அரசு ஸ்மார்ட் மீட்டர்களுக்கு மானியம் வழங்கி வருகிறது. ஏற்கனவே, நாட்டில் 19.74 கோடி ஸ்மார்ட் மீட்டர்கள் பொறுத்தப்பட்டு உள்ளன.

கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்த இரண்டு ஆண்டுகளில் பெரிய ஊழல்கள் வெளிவந்து உள்ளன. காங்., மீண்டும் ஆட்சிக்கு வராது என்பது தெரிந்துவிட்டது. இதனால் முடிந்தவரை ஊழல் செய்து, பணத்தை சுருட்ட முயற்சிக்கின்றனர்.

முஸ்லீம் இட ஒதுக்கீடு பிரச்னையில் பா.ஜ., வுடன் சேர்ந்து போராட்டம் நடத்துவோம். மத அடிப்படையிலான இட ஒதுக்கீட்டிற்கு இடமில்லை. காங்கிரஸ் திருப்திபடுத்தும் அரசியலை கைவிட வேண்டும்.

நான் அரசியலில் புதிதாக நுழைந்து உள்ள இளைஞர். என்னைப் போன்ற பல இளைஞர்கள் அரசியலுக்கு வர ஆசைப்படுகின்றனர். விதான் சவுதா என்பது கோவில் போன்றது. அப்படிப்பட்ட கோவிலில், ஹனிடிராப் போன்ற விவாதங்கள் நடப்பது மிக மோசமான செயலாகும்.

ஹனிடிராப் விவகாரத்தின் மூலம் அமைச்சர்களுக்கே பாதுகாப்பு இல்லை என்பது நிரூபணமாகி உள்ளது. இந்த விஷயத்திற்கு பின்னால், இருக்கும் நபர் யார் என்பதை அறிய மக்கள் ஆர்வமுடன் இருக்கின்றனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement