தங்கம் வென்றது இந்தியா * செபக்தக்ரா உலக கோப்பையில்

பாட்னா: செபக்தக்ரா உலக கோப்பை இந்தியா முதல் தங்கப்பதக்கம் கைப்பற்றியது. நேற்று நடந்த பைனலில் 2-1 என ஜப்பானை வீழ்த்தியது.
பீஹாரில், உலக கோப்பை செபக்தக்ரா 5வது சீசன் நடந்தது. ஆண்கள் அணிகளுக்கான 'ரெகு' பிரிவில் இந்திய அணி, லீக் சுற்றில் முதல் போட்டியில் 2-0 போலந்தை வீழ்த்தியது. அடுத்து பிரேசிலை 2-0 என சாய்த்தது.
தொடர்ந்து நடந்த அரையிறுதியில் இந்திய அணி, ஈரானை எதிர்கொண்டது. இதில் இந்தியா 2-0 என (15-7, 15-10) வென்று பைனலுக்குள் நுழைந்தது. இதில் ஜப்பானை சந்தித்தது.
முதல் செட்டை 11-15 என இழந்த இந்தியா, அடுத்த செட்டை 15-11 என கைப்பற்றியது. மூன்றாவது, கடைசி செட் இழுபறி ஆனது. இதை இந்தியா 17-14 என வசப்படுத்தியது. முடிவில் இந்திய அணி 2-1 என வெற்றி பெற்று தங்கப்பதக்கம் கைப்பற்றியது.
பெண்கள் 'வெண்கலம்'
பெண்கள் அணிகளுக்கான 'ரெகு' பிரிவில் இந்திய அணி முதல் போட்டியில் போலந்தை 2-0 என வென்றது. அடுத்து மலேசியா (2-0), நேபாளாத்தை (2-0) சாய்த்தது. லீக் சுற்றில் மூன்று போட்டியிலும் வெற்றி பெற்ற இந்திய அணி, அரையிறுதியில் வியட்நாமை எதிர்கொண்டது. இதில் 0-2 (7-15, 6-15) என்ற செட் கணக்கில் தோல்விடைய, இந்தியாவுக்கு வெண்கலம் கிடைத்தது.
இத்தொடரில் இந்தியா 1 தங்கம், 1 வெள்ளி, 5 வெண்கலம் என மொத்தம் 7 பதக்கம் கைப்பற்றியது.

Advertisement