வீடு ஒதுக்காமல் இழுத்தடிப்பதால் ஆவேசம்; பொதுமக்கள் கோபம்; தி.மு.க., வார்டு செயலாளர் ஓட்டம்

கோவை: கோவையில், முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்த, அடுக்குமாடி குடியிருப்புகளை ஒதுக்காமல் இருப்பதால், துாய்மை பணியாளர்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். சமரசம் செய்ய வந்த, தி.மு.க., வார்டு செயலாளரிடம் அடுக்கடுக்காக கேள்விகள் கேட்டதால், அவர் ஓட்டம் பிடித்தார்.
கோவை மாநகராட்சியில் பணிபுரியும் துாய்மை பணியாளர்கள், உக்கடம் சி.எம்.சி., காலனியில் வசித்தனர். மேம்பாலப் பணிக்காக, அவர்களது வீடுகளை இடிக்க வேண்டிய நெருக்கடி ஏற்பட்டது.
அதேயிடத்தில் குடியிருப்பு கட்டித்தருவதாக உறுதி கூறியதால், வீடுகளை காலி செய்தனர்.மொத்தம், 520 வீடுகள் கட்ட வேண்டும்; முதல்கட்டமாக, 222 வீடுகளே கட்டப்பட்டிருக்கின்றன. கடந்தாண்டு அக்., 31ல் 'வீடியோ கான்பரன்ஸ்' முறையில், தமிழக முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்.
தி.மு.க.,வுக்கு முன்னுரிமை
துாய்மை பணியாளர்களில், தி.மு.க.,வை சேர்ந்தவர்களுக்கு முன்னுரிமை கொடுக்க, கட்சி நிர்வாகிகள் அழுத்தம் கொடுப்பதால், ஐந்து மாதமாகியும் இன்னும் பயனாளிகளுக்கு ஒதுக்கவில்லை. இச்சூழலில், நாளை (26ம் தேதி) குலுக்கல் முறையில் வீடு ஒதுக்க முடிவு செய்யப்பட்டிருந்தது.
தி.மு.க.,வினர் தலையிட்டு குலுக்கலை நிறுத்தியுள்ளனர். இதையறிந்த துாய்மை பணியாளர்கள், பூட்டை உடைத்து குடியிருப்புகளுக்குள் செல்ல முடிவெடுத்து, நேற்று குடியிருப்பு வளாகத்தில் திரண்டனர். தகவலறிந்த போலீசார் விரைந்து வந்து தடுத்தனர். துாய்மை பணியாளர்களை சமரசம் செய்ய, தி.மு.க., வார்டு செயலாளர் ஆனந்தன் அங்கு வந்தார்.
அவர் கூறுகையில், ''அதிகாரிகளிடம் நான் தான் பேசினேன். 222 வீடுகளுக்கு, 308 டோக்கன் போடுகிறார்கள். வெள்ளை டோக்கன் வந்தால் வீடு கிடையாது; நீல நிற டோக்கன் வந்தால் வீடு என கூறுகிறார்கள். இதை ஏற்க முடியுமா. 222 வீடுகளுக்கு, 222 டோக்கன் போட்டால் போதும் என கூறியுள்ளேன்,'' என்றார்.
'உங்களுக்கு என்ன வேலை'
அவரை அங்கிருந்தவர்கள் சூழ்ந்து, 'இந்தப் பிரச்னைக்கும் உங்களுக்கும் என்ன சம்பந்தம். எங்களுக்கு இங்கு வீடு இருக்கிறது. உங்களுக்கு இங்கு வீடு இல்லை; நீங்கள் ஏன் வருகிறீர்கள். ஒரு வீடு இல்லாமல் தகர கொட்டகையில் வசிக்கிறோம். ஏற்கனவே வீடு வாங்கியவர்களுக்கு இரண்டாவது வீடு, மூன்றாவது வீடு கேட்பது ஏன்' என, வாக்குவாதம் செய்தனர்.
இரு தரப்புக்கும் இடையே, காரசாரமாக வாக்குவாதம் ஏற்பட்டு, மோதிக்கொள்ளும் சூழல் உருவானது. இதையடுத்து, ஆனந்தன் ஸ்கூட்டரை எடுத்துக் கொண்டு இடத்தை காலி செய்தார்.இதன்பின், நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய உதவி நிர்வாக பொறியாளர் வெங்கட், உதவி பொறியாளர் ராஜேஷ் வந்து, 'அடுத்த மாதம் குலுக்கல் போடலாம்' என, கூறினர். அதை பொதுமக்கள் ஏற்காததால், 'அலுவலகத்துக்கு நாளை (இன்று) வாருங்கள்; பேசிக் கொள்ளலாம்' என்று கூறி அனைவரையும் அனுப்பி வைத்தனர்.








மேலும்
-
தந்தை, மகளை சுட்டுக் கொன்ற வாலிபர் தற்கொலை!
-
ரூ.200 கோடி வரி ஏய்ப்பை கண்டுபிடிக்க உதவிய வாட்ஸ் அப் செயலி: நிர்மலா சீதாராமன்
-
வீடு வீடாக சென்று போதைப்பொருள் பயன்படுத்துவோர் கணக்கெடுப்பு: பஞ்சாப் அரசின் புது திட்டம்
-
அமித்ஷா மீது உரிமை மீறல் தீர்மானம்: காங்கிரஸ் நோட்டீஸ்
-
தொழில் முதலீடுகளை ஈர்ப்பதில் கவனம் செலுத்த வேண்டும்: தமிழக அரசுக்கு ராமதாஸ் அறிவுரை
-
கண்காட்சி போட்டி: இந்தியா வருகிறார் அர்ஜென்டினா வீரர் மெஸ்ஸி