கர்நாடகாவில் இருந்து 7,525 லிட்டர் எரிசாராயம் கடத்தல்: ஓசூரில் லாரியுடன் மடக்கியது போலீஸ்

ஓசூர்: ஓசூரில் கேரளாவிற்கு லாரியில் கடத்திச் செல்லப்பட்ட 7525 லிட்டர் எரிசாராயம் பறிமுதல் செய்யப்பட்டது.



இதுபற்றிய விவரம் வருமாறு: கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் தேசிய நெடுஞ்சாலையில் மதுவிலக்கு அமல் பிரிவு போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது கர்நாடக மாநிலம் ஹூப்ளியில் இருந்து கேரளா நோக்கி ஈச்சர் லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது.


அந்த வாகனத்தை தடுத்து நிறுத்தி போலீசார் தீவிர சோதனையிட்டனர். சோதனையில் லாரியில் 215 கேன்களில் எரிசாராயம் பதுக்கி கடத்திச் செல்ல முற்பட்டது தெரிய வந்தது.
இதையடுத்து, லாரியில் இருந்த 7525 லிட்டர் எரி சாராயத்தை போலீசார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக லாரியில் வந்த சயாத் மற்றும் பாபுராஜ் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர்.


யாருக்காக, எங்கே கடத்திச் செல்லப்பட்டது, கேரளாவில் இதை பெற்றுக் கொள்ள காத்திருந்த நபர்கள் யார் என்று அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement