வரத்து குறைவால் புளி விலை உயர்வு

கிருஷ்ணகிரி:தமிழகத்தின் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மட்டும், ஆண்டுக்கு சராசரியாக, 10,000 டன்னுக்கு மேலாக புளி உற்பத்தியாகிறது. சீசன் காலங்களில், வியாழன், ஞாயிற்றுக்கிழமைகளில் புளி சந்தை கூடும்.

இதில், கிருஷ்ணகிரி மாவட்டம் மட்டுமின்றி, கர்நாடகா, ஆந்திராவில் இருந்தும் வியாபாரிகள் புளியை கொண்டு வருவர். கிருஷ்ணகிரி புளி சந்தையின் விலையை வைத்தே, இந்தியாவின் பெரிய புளி சந்தையான ராஞ்சி மற்றும் ஜபல்பூர் புளி சந்தைகளில், விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. இங்கு, சிறு விவசாயிகள் மட்டுமின்றி, குத்தகைதாரர்களும் புளி கொண்டு வருவர். கிருஷ்ணகிரி புளி வியாபாரிகள் கூறியதாவது:

கடந்தாண்டு இறுதியில் புளிய மரத்தில் பூக்கள் பூத்த நேரத்தில், தொடர்ந்து மூன்று மாதம் மாவட்டத்தில் நல்ல மழையால், பெரும்பாலான மரங்களில் பூக்கள் உதிர்ந்தன. இதனால், இந்தாண்டு, 70 சதவீதம் மட்டுமே புளி வரத்து இருக்கும்.

விளைச்சல் குறைவால், கடந்த ஆண்டை விட இந்தாண்டு கிலோவிற்கு, 5 --- 10 ரூபாய் வரை புளி விலை அதிகரித்துள்ளது. மூன்றாம் தரமான கொட்டைப்புளி கிலோ, 45 ரூபாய் வரை விலை போகிறது. இரண்டாம் தரம், 50 -- 55 ரூபாய் வரையும், முதல் தரம், 55 -- 65 ரூபாய் வரையும், கொட்டை இல்லாத பூப்புளி, 100 -- 115 ரூபாய் வரையும் விற்பனையாகிறது.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement