கல்வியால் மட்டுமே நல்ல அரசை தர முடியும் வி.ஐ.டி., வேந்தர் விஸ்வநாதன் பேச்சு

சென்னை,:வி.ஐ.டி., பல்கலை சென்னை வளாகத்தில், பல்கலை தின விழா கொண்டாடப்பட்டது.

வி.ஐ.டி., நிறுவனரும், பல்கலை வேந்தருமான கோ.விஸ்வநாதன் தலைமை வகித்தார். துணைத்தலைவர் ஜி.வி.செல்வம் முன்னிலை வகித்தார்.

ஆஸ்திரேலிய துணை துாதரக அதிகாரி கேத்ரினா நேப், டி.சி.எஸ்., நிறுவன தலைமை மனித வள மேம்பாட்டு அதிகாரி சுதீப் குன்னுமால் ஆகியோர், சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றனர்.

வி.ஐ.டி., சென்னையின் இணை துணைவேந்தர் தியாகராஜன் ஆண்டறிக்கை வாசித்தார்.

ஆஸ்திரேலிய துணை துாதரக அதிகாரி கேத்ரினா நேப் பேசியதாவது:

இந்திய - ஆஸ்திரேலிய அரசுகள் பல்வேறு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டு, கல்விப்பணியில் வலுவான தொடர்பில் உள்ளன.

இந்தியாவிலிருந்து ஒவ்வொரு ஆண்டும், ஆயிரக்கணக்கானோர் கல்வி கற்க, ஆஸ்திரேலியா செல்கின்றனர்.

அங்குள்ள பாடத்திட்டம், தொழில் துறைக்கு ஏற்றதாக உள்ளது. மாணவர்களின் எதிர்காலத்தை, திறன்களே வடிவமைக்கும்.

அதனால், புதிய பாதையை தேர்ந்தெடுக்க தயங்காமல், சவால்களை சந்தித்து முன்னேறுங்கள்.

இவ்வாறு அவர் பேசினார்.

வி.ஐ.டி., பல்கலை வேந்தர் கோ.விஸ்வநாதன் பேசியதாவது:

ஆஸ்திரேலியா, தென்கொரியாவில் உயர்கல்வி சேர்க்கை, 100 சதவீதமாகவும், மற்ற நாடுகளில், 70 முதல், 80 சதவீதமாகவும் உள்ளது.

நம் நாட்டில், 28 சதவீதமாகவே உள்ளது. மற்ற நாடுகளில், உள்நாட்டு உற்பத்தியில், ஐந்து சதவீதத்துக்கும் மேல், உயர்கல்விக்கு செலவிடும் நிலையில், கோத்தாரி கமிஷனும், புதிய கல்வி கொள்கையும், நம் நாட்டு உயர்கல்விக்கு ஆறு சதவீதம் ஒதுக்க வேண்டும் எனக் கூறும் நிலையில், வெறும் மூன்று சதவீதமே ஒதுக்கப்படுகிறது.

கல்வியையும், மருத்துவத்தையும் அரசே வழங்க வேண்டும். அது இல்லாததால் தான், நாம் பல துறைகளில் பின் தங்கி உள்ளோம். கல்வியால் மட்டுமே நல்ல அரசையும், அரசியலையும் தர முடியும்.

இவ்வாறு அவர் பேசினார்.

நிகழ்ச்சியில், படிப்பு, விளையாட்டில் சிறந்த மாணவ - மாணவியருக்கு விருதுகள் மற்றும் பரிசுத்தொகை வழங்கப்பட்டது.

அதில், வி.ஐ.டி., சென்னையின் கூடுதல் பதிவாளர் மனோகரன், பேராசிரியர்கள், மாணவர்கள் பங்கேற்றனர்.

Advertisement