தமிழகத்தின் 2வது பல்லுயிர் தளமானது காசம்பட்டி வீரகோயில் வனப்பகுதி

4

சென்னை: திண்டுக்கல், நத்தம் அருகே உள்ள காசம்பட்டி வீரகோவில் வனப்பகுதி பல்லுயிர் மரபு தளமாக அறிவித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டு உள்ளது.

மதுரை மாவட்டம் அரிட்டாபட்டி பகுதியானது பல்லுயிர் பாரம்பரிய தளமாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இதனைத் தொடர்ந்து, உயிர்ப்பன்மையச் சட்டம் 2002ன் , திண்டுக்கல் மாவட்டம் நத்தம் தாலுகாவிற்கு உட்பட்ட ரெட்டியப்பட்டி கிராமத்தில் 4.97 ஹெக்டேர் பரப்பளவில் அமைந்துள்ள காசம்பட்டி வீரகோவில் வனப்பகுதியை பல்லுயிர் மரபு தளமாக அறிவிக்கப்பட்டு உள்ளது.


இது தொடர்பாக தமிழக அரசின் வனம் மற்றும் சுற்றுச்சூழல் துறை அரசு கூடுதல் தலைமை செயலாளர் சுப்ரியா சாகு வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாது: காசம்பட்டி வீரகோவில் வனப்பகுதியை உயிரியல் பன்முகத்தன்மை சட்டம் 2002 ன் கீழ் பல்லுயிர் பாரம்பரிய தளமாக அறிவிக்க முதல்வர் ஸ்டாலின் அனுமதி அளித்து உள்ளார். இந்த அறிவிப்பு அரசிதழில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டு உள்ளது.


மதுரையில் உள்ள அரிட்டாபட்டியைத் தொடர்ந்து தமிழகத்தின் இரண்டாவது பல்லுயிர் தலமாக இது திகழ்கிறது. அழகர்மலை ரிசர்வ் வனப்பகுதிக்கு அருகில் அமைந்துள்ள காசம்பட்டி வனப்பகுதி 4.97 ஹெக்டேர் பரப்பளவில் அமைந்துள்ளது. கடவுள் வீரணனை வழிபடும் மக்களால் இந்த வனப்பகுதி பாதுகாக்கப்படுகிறது. மத முக்கியத்துவத்திற்கு அப்பால், இந்த வனப்பகுதியானது உள்ளூர் வன விலங்குகளை பாதுகாக்கவும், சுற்றுச்சூழல் சமநிலையை பராமரிக்கும் ஒரு சுற்றுச்சூழல் பாலமாக இந்த வனப்பகுதி திகழ்கிறது.


பல்லுயிர் பெருக்கத்தின் ஒரு மையமாக திகழும் இந்த வனப்பகுதியில் 48 வகையான தாவர இனங்கள், 12க்கும் மேற்பட்ட பறவை இனங்கள், சிறிய பாலூட்டிகள் மற்றும் ஏராளமான பூச்சிகளுக்கு அடைக்கலம் தருகிறது. இந்த நடவடிக்கையானது, வனப்பகுதியின் மரபணு பன்முகத்தன்மை, சுற்றுச்சூழல் முக்கியத்துவம் மற்றும் எதிர்கால சந்ததியினருக்கான கலாச்சார பாரம்பரியத்தின் நீண்டகால பாதுகாப்பை உறுதி செய்கிறது. இவ்வாறு அந்த அறிக்கையில் சுப்ரியா சாகு கூறியுள்ளார்.

Advertisement