கராத்தே பயிற்சியாளர் ஷிஹான் ஹுசைனி மறைவு

சென்னை:ரத்த புற்று நோயால் பாதிக்கப்பட்டு, ஒவ்வொரு நொடியும் மரணத்தை எதிர் நோக்கி இருந்த, கராத்தே மற்றும் வில் வித்தை பயிற்சியாளர் ஷிஹான் ஹுசைனி காலமானார்.

மதுரையை சேர்ந்தவர் ஷிஹான் ஹுசைனி, 60. இவர், சென்னை பெசன்ட் நகரில் வசித்து வந்தார். தற்காப்பு கலையான கராத்தே மற்றும் வில் வித்தை பயிற்சியாளராக இருந்தார்.

அத்துடன் ஓவியம், சிற்பம் தொடர்பாக, மாணவர்களுக்கு பயிற்சி அளித்து வந்தார். மறைந்த இயக்குநர் பாலச்சந்தர் இயக்கத்தில், 'புன்னகை மன்னன்' என்ற படத்தில் நடிகராக அறிமுகமாகி, பல படங்களில் நடித்துள்ளார்.

ரத்த புற்று நோயால் பாதிக்கப்பட்டு, சென்னையில் தனியார் மருத்துவமனையில், சிகிச்சை பெற்று வந்தார். அங்கு சிகிச்சை பலனின்றி, நேற்று அதிகாலை, 1:45 மணிக்கு இறந்தார்.

அவரது உடல், பெ சன்ட் நகரில் உள்ள, அவரது இல்லத்தில் நேற்று வைக்கப்பட்டிருந்தது.

அங்கு, சினிமா பிரபலங்கள், கராத்தே, வில் வித்தை வீரர்கள், ஷிஹான் ஷுசைனி மாணவர்கள் என, ஏராளமானோர் அஞ்சலி செலுத்தினர்.

ஆந்திர மாநில துணை முதல்வர் பவன் கல்யாண், 'ஷிஹான் ஹுசைனி, எனக்கு கராத்தே கற்று தந்த குரு' என, தெரிவித்து உள்ளார்.

Advertisement