மீஞ்சூர் கடல் நீரை குடிநீராக்கும் திட்டம் விரைவில் செயல்பாட்டுக்கு வரும்: நேரு
சென்னை, மீஞ்சூர் கடல் நீரை குடிநீராக்கும் திட்டம் விரைவில் செயல்பாட்டுக்கு வரும் என, நகர்ப்புற உள்ளாட்சித்துறை அமைச்சர் நேரு தெரிவித்துள்ளார்.
சட்டசபையில் நடந்த விவாதம்:
அ.தி.மு.க., கொறடா வேலுமணி:
அ.தி.மு.க., ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட, மீஞ்சூர் கடல் நீரை குடிநீராக்கும் திட்டத்தால் தினமும் கிடைத்த 10 கோடி லிட்டர் குடிநீரால், 9 லட்சம் பேர் பயன்பெற்று வந்தனர்.
தற்போது இத்திட்டம் நிறுத்தப்பட்டுள்ளது. இதனால், மணலி, மாதவரம், எண்ணுார், கத்திவாக்கம், திருவொற்றியூர் பகுதி மக்கள் போதிய அளவு குடிநீர் கிடைக்காமல் அவதிப்பட்டு வருகின்றனர். இத்திட்டத்தால் 250 பேர் வேலையிழந்துள்ளனர். இத்திட்டம் எதனால் நிறுத்தப்பட்டது? மீண்டும் எப்போது செயல்படும்? மரக்காணம், ராமநாதபுரம் உட்பட பிற மாவட்டங்களில் அறிவிக்கப்பட்ட கடல் நீரை குடிநீராக்கும் திட்டம் என்ன ஆனது?
அமைச்சர் நேரு:
மீஞ்சூர் கடல் நீரை குடிநீராக்கும் திட்டத்தை எடுத்து நடத்துபவர்கள் சரியாக நடத்தவில்லை. இதனால், தினமும் 10 கோடி லிட்டருக்கு பதிலாக, 6 கோடி, 4 கோடி லிட்டர் என குறைந்தது. அனைத்து இயந்திரங்களும் பழுதுபட்டுள்ளது. அங்கு பணியாற்றும் ஊழியர்களுக்கு சம்பளமும் கொடுக்கவில்லை. எனவே, மீஞ்சூர் கடல் நீரை குடிநீராக்கும் திட்டத்தை தமிழக அரசே ஏற்று நடத்தவுள்ளது. இத்திட்டத்திற்காக நிலம் கொடுத்து அங்கு வேலை செய்தவர்களுக்கு மீண்டும் வேலை வழங்கப்படும்.
கடல் நீராக்கும் திட்டத்தில் 1,000 லிட்டர் குடிநீருக்கு 50 ரூபாய் செலவாகிறது. ஆனால், இயற்கை நீரை சேமித்து தரும்போது 1,000 லிட்டர் குடிநீருக்கு 12 ரூபாய் செலவாகிறது. எனவே, கடல் நீரை குடிநீராக்கும் திட்டத்திற்கு மாற்றாக, ராமநாதபுரத்திற்கு தனியாக, 3,900 கோடி ரூபாயில் காவிரி நீரை ஆதாரமாகக் கொண்டு, தனி குடிநீராக்கும் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. இன்னும் மூன்று மாதங்களில் ராமநாதபுரம் மாவட்டத்திற்கும் குடிநீர் கிடைக்கும். கடல் நீரை குடிநீராக்கும் திட்டத்திற்குப் பதிலாக, விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தில் பெரிய ஏரி உருவாக்கப்படும்.
இவ்வாறு விவாதம் நடந்தது.
***
மேலும்
-
மாஜி எம்.எல்.ஏ., கருப்பசாமி பாண்டியன் மறைவு: இ.பி.எஸ். இரங்கல்
-
உ.பி.,யில் முஸ்லிம்கள் பாதுகாப்பாக இருக்கிறார்கள்: சொல்கிறார் யோகி ஆதித்யநாத்
-
லோக்சபாவில் பேச அனுமதிக்கவில்லை என ராகுல் புகார்: விதிப்படி நடக்க சபாநாயகர் அறிவுரை
-
ஏப்.,2ல் அரசு ஊழியர்களுக்கு சம்பளம்
-
2027க்குள் ஜி.டி.பி.,யில் ஜெர்மனியை இந்தியா முந்திவிடும்; ஐ.எம்.எப்., கணிப்பு
-
மறைந்த நடிகர் மனோஜ் உடலுக்கு முதல்வர் ஸ்டாலின் நேரில் அஞ்சலி