நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் மன்னிப்பு கோரி கலெக்டர் மனு
சென்னை, மார்ச் 26--
நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் ஆஜரான செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர், நிபந்தனையற்ற மன்னிப்பு கோரினார். இதையடுத்து, அவருக்கு எதிரான, 'வாரன்ட்' உத்தரவை, சென்னை உயர் நீதிமன்றம் திரும்பப் பெற்றது.
செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் தாலுகாவுக்கு உட்பட்ட ஆனைகுன்றம் கிராமத்தில், கிராம உதவியாளராகப் பணிபுரிந்த முனுசாமி என்பவர், 2001ல் மரணம் அடைந்தார்.
இதையடுத்து, முனுசாமியின் மகன் ராஜகிரி, தனக்கு கருணை அடிப்படையில் வேலை வழங்க கோரி விண்ணப்பித்தார்.
ஆனால், மூன்று ஆண்டு காலதாமதமாக விண்ணப்பித்ததாகக் கூறி, 2022ல் ராஜகிரியின் விண்ணப்பத்தை நிராகரித்து, செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் உத்தரவு பிறப்பித்தார்.
இதை எதிர்த்து, ராஜகிரி தாக்கல் செய்த மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், 'மூன்று மாதங்களுக்குள் ராஜகிரிக்கு கருணை அடிப்படையில் பணி வழங்க வேண்டும்' என, 2023, டிச., 19ல் உத்தரவிட்டது.
இந்த உத்தரவை அமல்படுத்தவில்லை எனக் கூறி, 2024ல் உயர் நீதிமன்றத்தில் ராஜகிரி சார்பில் வழக்கறிஞர் எஸ்.பி.சுடலையாண்டி, நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தார்.
இந்த மனுவை விசாரித்த, நீதிபதி எம்.எஸ்.ரமேஷ், செங்கல்பட்டு மாவட்ட கலெக்டரை நேரில் ஆஜராக உத்தரவிட்டு, சட்டப்பூர்வ நோட்டீஸ் பிறப்பித்தார்.
இருப்பினும், மாவட்ட கலெக்டர் நேரில் ஆஜராகாததை அடுத்து, அவருக்கு எதிராக ஜாமினில் வெளிவரக் கூடிய 'வாரன்ட்' பிறப்பித்து, நீதிபதி உத்தரவிட்டார். இந்த வழக்கு, நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மாவட்ட கலெக்டர் எஸ்.அருண்ராஜ் நேரில் ஆஜரானார்.
பின், மாவட்ட கலெக்டர் சார்பில், கூடுதல் அட்வகேட் ஜெனரல் சுரேஷ்குமார் ஆஜராகி, நிபந்தனையற்ற மன்னிப்பு கோரி மனு தாக்கல் செய்தார்.
அதில், 'என் கவனத்துக்கு, நீதிமன்ற உத்தரவு கொண்டுவரப்படவில்லை; உத்தரவை மீறவில்லை. சில நிர்வாக காரணங்களால் மனுதாரருக்கு பணி வழங்குவது தாமதம் ஏற்பட்டது. தற்போது, மனுதாரருக்கு திருப்போரூர் வட்டாசியர் அலுவலகத்தில் இளநிலை வருவாய் ஆய்வாளர் பணி வழங்கி, மார்ச் 24ல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது' என, குறிப்பிடப்பட்டது.
இதையடுத்து, மாவட்ட கலெக்டருக்கு எதிரான வாரன்ட் உத்தரவை திரும்ப பெற்ற நீதிபதி, ஏப்.4ம் தேதிக்கு நீதிமன்ற அவமதிப்பு வழக்கை தள்ளிவைத்தும், விசாரணையில் இருந்து நேரில் ஆஜராக விலக்களித்தும் உத்தரவிட்டார்.
மேலும்
-
லோக்சபாவில் பேச அனுமதிக்கவில்லை என ராகுல் புகார்: விதிப்படி நடக்க சபாநாயகர் அறிவுரை
-
ஏப்.,2ல் அரசு ஊழியர்களுக்கு சம்பளம்
-
2027க்குள் ஜி.டி.பி.,யில் ஜெர்மனியை இந்தியா முந்திவிடும்; ஐ.எம்.எப்., கணிப்பு
-
மறைந்த நடிகர் மனோஜ் உடலுக்கு முதல்வர் ஸ்டாலின் நேரில் அஞ்சலி
-
5 நாட்களில் 3 டிகிரி செல்சியஸ் வெப்பம் உயரும்: வானிலை மையம் லேட்டஸ்ட் தகவல்
-
கூட்டணி கணக்கு குறித்து சட்டசபையில் விவாதம்!