கோவில் அருகில் குப்பை குவியல் செவிலிமேடில் சுகாதார சீர்கேடு

செவிலிமேடு:காஞ்சிபுரம் மாநகராட்சி 42வது வார்டு, செவிலிமேடு பள்ளிக்கூட பின் தெருவில், கிராம தேவதை நாகாத்தம்மன் கோவில் உள்ளது. இப்பகுதியில் சேகரமாகும் குப்பையை மாநகராட்சி துாய்மை பணியாளர்கள் நாகாத்தம்மன் கோவில் எதிரில் உள்ள காலி இடத்தில் குவித்து வைத்து பின், அகற்றி வருகின்றனர்.

இதனால், அப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதால் கோவிலுக்கு வந்து செல்லும் பக்தர்கள் முகம் சுளித்தபடியே வந்து செல்கின்றனர்.

மேலும், குப்பை கொட்டப்படும் அருகிலேயே ரேஷன் கடை, மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி உள்ளதால், காற்றில் பறக்கும் குப்பையால் சுகாதார சீர்கேடு ஏற்படும் சூழல் உள்ளது.

எனவே, செவிலிமேடு நாகாத்தம்மன் கோவில் அருகில், துாய்மை பணியாளர்கள் குப்பை கொட்டுவதற்கு மாநகராட்சி தடை விதிக்க வேண்டும் என, அப்பகுதியினர் வலியுறுத்தியுள்ளனர்.

Advertisement