முன்னாள் மாணவர்கள் சந்திப்பு

அருப்புக்கோட்டை:''பழைய மாணவர்களை சந்தித்து பேசியதில் மிக்க மகிழ்ச்சி,'' என, பழைய மாணவர் சந்திப்பு நிகழ்ச்சியில் 'நக்கீரன்' இதழ் ஆசிரியர் கோபால் கூறினார்.

விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டையில் எஸ்.பி.கே., ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில், 1973 - 74ம் ஆண்டு எஸ்.எஸ்.எல்.சி., முடித்த பழைய மாணவர்கள் பொன்விழா ஆண்டு சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது.

இதில், நக்கீரன் கோபால் பழைய மாணவராக பங்கேற்றார். பழைய மாணவர்கள் தங்கள் பள்ளி கால நினைவுகளை பகிர்ந்து கொண்டனர். நக்கீரன் கோபாலுக்கு, சக நண்பர்கள் வீர வாள் வழங்கி கவுரவித்தனர்.

நக்கீரன் கோபால் கூறுகையில், ''என் பழைய நண்பர்களை, 50 ஆண்டுகளுக்குப் பின் சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி.

''பழைய கால வாழ்க்கை இப்போது கிடைக்காதா என ஏங்குபவர்கள் பலர் உள்ளனர். பல விருதுகள் வரும், போகும். இந்த நாள் வராது.

''இந்த தொடர்பு ஜென்மத்துக்கும் நீடிக்க வேண்டும் என்பது என் ஆசை,'' என்றார்.

Advertisement