100 நாள் வேலை திட்டத்தில் தமிழகத்துக்கு அதிக நிதி! பார்லிமென்டில் மத்திய அரசு தகவல்

புதுடில்லி: 'மஹாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ், 20 கோடி மக்கள் உள்ள உத்தர பிரதேசத்தை விட, ஏழு கோடி மக்கள் தொகை உள்ள தமிழகத்துக்கு அதிக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என, மத்திய அரசு பார்லிமென்டில் தெரிவித்துள்ளது.
பார்லிமென்ட் பட்ஜெட் கூட்டத்தொடர் நடந்து வருகிறது. லோக்சபாவில் நேற்று கேள்வி நேரத்தின்போது, தெலுங்கு தேசம் கட்சியைச் சேர்ந்த மத்திய ஊரக வளர்ச்சித் துறை இணை அமைச்சர் சந்திரசேகர் பெம்மசானி கூறியதாவது:
மத்திய அரசின், 100 நாள் வேலை வாய்ப்பை உறுதி செய்யும் இந்த திட்டத்தின் வாயிலாக மாநிலங்களுக்கு வழங்கப்படும் நிதியில் எந்த பாரபட்சமும் பார்க்கப்படுவதில்லை. மேற்கு வங்கத்தில் இந்த திட்டத்தில் பல முறைகேடுகள் நடந்துள்ளன. மத்திய அரசின் நிதியில் மோசடி நடந்ததாக புகார்கள் எழுந்தன.
நடவடிக்கை
இது தொடர்பாக ஆய்வு செய்ததில், 44 பணிகளில் முறைகேடுகள் நடந்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டது. அதில், 34 பணிகளுக்கான தொகை வசூலிக்கப்பட்டு விட்டது. மீதமுள்ள, 10 பணிகள், முழுமையாக முடியவில்லை. இந்த வகையில், 5.37 கோடி ரூபாய் முறைகேடு செய்யப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. அதில், 2.39 கோடி ரூபாய் வசூலிக்கப்பட்டுள்ளது. மீதமுள்ளதை மீட்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்த மோசடிகளை தடுத்து, உரிய முறையில் செயல்படுத்தத் தயாராக இருந்தால், மேற்கு வங்க மாநில அரசுடன் பேசுவதற்கு ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் சிவ்ராஜ் சிங் சவுகான் தயாராக உள்ளார். இவ்வாறு அவர் கூறினார்.
அப்போது குறுக்கிட்ட தி.மு.க.,வின் கனிமொழி, ''தமிழகத்துக்கு கடந்த ஐந்து மாதங்களில் தர வேண்டிய, 4,034 கோடி ரூபாயை மத்திய அரசு நிலுவை வைத்துள்ளது,'' என, குறிப்பிட்டார்.
இதற்கு பதிலளித்து சந்திரசேகர் பெம்மசானி கூறியதாவது: தேவைகளின் அடிப்படையிலேயே பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. வேலை செய்தவர்களுக்கு, 15 நாட்களுக்குள் பணம் தரப்படும். அதற்கு மேலானால், அதற்கு வட்டி தரப்படும். காங்கிரஸ் தலைமையிலான முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் இந்த சட்டம் கொண்டு வரப்பட்டது. அப்போது, இந்த நிபந்தனைகள் அதில் சேர்க்கப்பட்டன.
இந்த சட்டத்தின்படி, நிதி தாமதமானால், மாநில அரசு முதலில் அதை வேலை செய்தவர்களுக்கு வழங்கும். மாநில அரசுக்கு மத்திய அரசு அளிக்கும். இந்த நிதியாண்டில், தமிழகத்துக்கு, 7,300 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது.
இதற்கு முன்பும், ஏழு கோடி மக்கள் தொகை உள்ள தமிழகத்துக்கு, 10,000 கோடி ரூபாய் வரை வழங்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில், 20 கோடி மக்கள் தொகை உள்ள உத்தர பிரதேசத்துக்கும், 10,000 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. அதனால், இந்த திட்டத்தில் மத்திய அரசு பாரபட்சமாக நடந்து கொள்கிறது என்ற கேள்விக்கே இடமில்லை. இவ்வாறு அவர் கூறினார்.
இதற்கு தி.மு.க.,வைச் சேர்ந்த உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்து கோஷமிட்டனர்.
அப்போது குறுக்கிட்ட சிவ்ராஜ் சிங் சவுகான், ''தமிழகமோ, மேற்கு வங்கமோ, பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு எந்த மாநிலத்துக்கும் பாரபட்சம் காட்டியதில்லை. இந்த திட்டத்தின் கீழ் நிலுவையில் உள்ள தொகைகள் விரைவில் விடுவிக்கப்படும்,'' என்றார்.
அமைச்சரின் இந்த பதிலை ஏற்க மறுத்து, தி.மு.க., திரிணமுல் காங்கிரஸ் எம்.பி.,க்கள் கடும் கோஷம் எழுப்பினர். சபையின் மையப்பகுதிக்குச் சென்று அவர்கள் கோஷமிட்டனர். காங்கிரஸ், சமாஜ்வாதி கட்சியினர் அவர்களின் இடத்தில் நின்றபடி கோஷமிட்டனர்.
வலியுறுத்தல்
தங்களுடைய இருக்கைக்கு திரும்பும்படி, சபாநாயகர் ஓம் பிர்லா வலியுறுத்தியும், அவர்கள் தொடர்ந்து கோஷமிட்டனர். இதனால், பகல் 12:00 மணி வரை, 15 நிமிடங்களுக்கு சபை ஒத்தி வைக்கப்பட்டது. கேள்வி நேரத்தில் அரசியல் செய்யக் கூடாது என, சபாநாயகர் கண்டித்தார்.
இதைத் தொடர்ந்து பேசிய கேரளாவைச் சேர்ந்த காங்கிரஸ் எம்.பி., அடூர் பிரகாஷ், கேரளாவுக்கு மூன்று மாதங்களாக, 811 கோடி ரூபாய் நிலுவை உள்ளதாகக் குறிப்பிட்டார். மேலும், இந்த திட்டத்தை, 150 நாட்களுக்கு விரிவுபடுத்தப்படுமா என்றும் கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதிலளித்து இணையமைச்சர் சந்திரசேகர் பெம்மசானி கூறியதாவது: கேரளாவுக்கு இந்த ஆண்டில், 3,000 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டில், 3,500 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. நிதி ஒதுக்கீடு என்பது ஒரு தொடர் நிகழ்வு. ஆய்வு செய்யப்பட்டு அவை வழங்கப்படுகின்றன. நிலுவையில் உள்ள அனைத்து தொகைகளும் அடுத்த சில வாரங்களில் வழங்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
வரும், 2025 - 2026ம் நிதியாண்டுக்கான பட்ஜெட் தொடர்பான நிதி மசோதா, லோக்சபாவில் நேற்று நிறைவேறியது. அடுத்ததாக ராஜ்யசபாவில் இது நிறைவேறியதும், பட்ஜெட் ஒதுக்கீடுகள் செயல்பாட்டுக்கு வரும்.மத்திய அரசு முன்மொழிந்துள்ள, 35 திருத்தங்களுடன், நிதி மசோதா, லோக்சபாவில் நேற்று நிறைவேறியது.
வரும் பட்ஜெட்டில், மொத்த செலவினம், 50.65 லட்சம் கோடி ரூபாய். இது நடப்பு நிதியாண்டைவிட, 7.4 சதவீதம் அதிகம்.மொத்த மூலதன செலவு, 11.22 லட்சம் கோடி ரூபாயாக இருக்கும். மத்திய அரசின் திட்டங்களுக்காக, 5.41 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. மொத்த நிதிப் பற்றாக்குறை 4.4 சதவீதமாக இருக்கும் என, கணிக்கப்பட்டுள்ளது.
நடப்பு நிதியாண்டில் இது 4.8 சதவீதமாக உள்ளது.வரும் நிதியாண்டின், ஜி.டி.பி., எனப்படும் மொத்த உள்நாட்டு உற்பத்தி, 356.97 லட்சம் கோடி ரூபாய். இது நடப்பு நிதியாண்டின் திருத்தப்பட்ட மதிப்பீடுகளைவிட, 10.1 சதவீதம் அதிகம்.




மேலும்
-
லோக்சபாவில் பேச அனுமதிக்கவில்லை என ராகுல் புகார்: விதிப்படி நடக்க சபாநாயகர் அறிவுரை
-
ஏப்.,2ல் அரசு ஊழியர்களுக்கு சம்பளம்
-
2027க்குள் ஜி.டி.பி.,யில் ஜெர்மனியை இந்தியா முந்திவிடும்; ஐ.எம்.எப்., கணிப்பு
-
மறைந்த நடிகர் மனோஜ் உடலுக்கு முதல்வர் ஸ்டாலின் நேரில் அஞ்சலி
-
5 நாட்களில் 3 டிகிரி செல்சியஸ் வெப்பம் உயரும்: வானிலை மையம் லேட்டஸ்ட் தகவல்
-
கூட்டணி கணக்கு குறித்து சட்டசபையில் விவாதம்!