கைலாஷ் யாத்திரை இந்தியா - சீனா பேச்சு

1

புதுடில்லி கைலாஷ் மானசரோவர் யாத்திரையை மீண்டும் துவங்குவது, எல்லைப் பிரச்னை ஆகியவை குறித்து, இந்தியா - சீனா பிரதிநிதிகளிடையே நேற்று பீஜிங்கில் பேச்சு நடந்தது.

இந்தியா - சீனா படையினருக்கு இடையே, 2020ல் கல்வான் பள்ளத்தாக்குப் பகுதியில் மோதல் ஏற்பட்டது. இதையடுத்து இரு நாடுகளுக்கு இடையிலான உறவு பாதிக்கப்பட்டது. இரு நாடுகளின் ராணுவ அதிகாரிகள், வெளியுறவு அமைச்சர்கள் இடையே நடந்த தொடர் பேச்சுவார்த்தையை அடுத்து, எல்லையில் அமைதி திரும்பியது.

இந்நிலையில், இருநாட்டு பிரதிநிதிகள் இடையே பீஜிங் நகரில், நேற்று எல்லை விவகாரங்கள் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நடந்தது. இந்திய தரப்பில் கிழக்காசிய நாடுகளின் விவகாரங்களுக்கான இணை செயலர் கவுரங்கலால் தாஸ் தலைமையிலான குழு பங்கேற்றது.

சீனா தரப்பில், அந்நாட்டின் வெளிவிவகாரத் துறையின் எல்லை மற்றும் கடல் விவகாரத் துறையின் தலைமை இயக்குநர் ஹோங் லியாங் தலைமையிலான குழு பங்கேற்றது. இரு அதிகாரிகள் குழுவினருக்கும் இடையே நடந்த பேச்சு, சுமூகமாகவும், இணக்கமாகவும் இருந்ததாகக் கூறப்பட்டது.

அதுபோல, அடுத்த சிறப்பு பிரதிநிதிகள் கூட்டத்தை, டில்லியில் நடத்துவது, அதுவரை எல்லை விவகாரத்தில் தற்போதைய அமைதி நிலையை தொடர்வது என்றும் இந்த சந்திப்பில் முடிவானது.

மேலும், 2020ல் நிறுத்தப்பட்ட கைலாஷ் மானசரோவர் யாத்திரையை மீண்டும் துவங்குவது குறித்தும், எல்லையில் இரு தரப்பு ஒத்துழைப்பை மேம்படுத்துவது குறித்தும் இக்கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.

Advertisement