வங்கதேசத்தில் ஆட்சியை கைப்பற்றும் ராணுவம்?

டாக்கா: வங்கதேசத்தில் இடைக்கால அரசிடம் இருந்து ஆட்சியைக் கைப்பற்ற ராணுவம் முயற்சித்து வருவதாகக் கூறப்படுகிறது.

நம் அண்டை நாடான வங்கதேசத்தில், அரசுக்கு எதிரான மாணவர்களின் போராட்டம் தீவிரமடைந்ததை அடுத்து, கடந்த ஆண்டு ஆகஸ்டில், அவாமி லீக் கட்சி தலைவர் ஷேக் ஹசீனா பிரதமர் பதவியை ராஜினாமா செய்து நம் நாட்டுக்கு தப்பி வந்தார்.

இதையடுத்து, முகமது யூனுஸ் தலைமையில் இடைக்கால அரசு பதவியேற்றது.

இடைக்கால அரசிடம் இருந்து ஆட்சியை கைப்பற்ற, ராணுவ தலைமை தளபதி வக்கார் உஸ் ஜமான் முயற்சித்து வருவதாக, அந்நாட்டு சமூக ஊடகங்களில் சமீபத்தில் தகவல் பரவியது. 

சட்டம் - ஒழுங்கு விவகாரத்தில், அரசின் தலைமை ஆலோசகர் முகமது யூனுஸ் மீது ராணுவ தலைமை தளபதி வக்கார் உஸ் ஜமான் அதிருப்தியில் இருப்பதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், தலைநகர் டாக்கா உட்பட நாட்டின் முக்கிய நகரங்களில், ராணுவ வீரர்கள் மற்றும் பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். இதனால், ஆட்சியைக் கைப்பற்ற ராணுவம் முயற்சிப்பதாகக் கூறப்படுகிறது.

இதற்கிடையே, ஆட்சியைக் கைப்பற்ற முயற்சிப்பதாக வெளியான தகவலை, வங்கதேச ராணுவம் நேற்று இரவு திட்டவட்டமாக மறுத்தது.

Advertisement