நெல் பிரித்தெடுக்கும் இயந்திரத்தை'மாஜி' ஊராட்சி தலைவர் பயன்படுத்தியதாக புகார்



நெல் பிரித்தெடுக்கும் இயந்திரத்தை'மாஜி' ஊராட்சி தலைவர் பயன்படுத்தியதாக புகார்

தலைவாசல்:கொள்முதல் மையத்தில் உள்ள, நெல் பிரித்தெடுக்கும் இயந்திரத்தை, மாஜி ஊராட்சி தலைவர் பயன்படுத்தியதாக எழுந்த புகார் குறித்து, ஆத்துார் நுகர்பொருள் வாணிப கழக கிடங்கு மேலாளர் விசாரணை நடத்தினார்.
தலைவாசல் அருகே, புளியங்குறிச்சி அரசு உயர்நிலைப்பள்ளி வளாகத்தில், தமிழக அரசின் நெல் கொள்முதல் மையம் செயல்பட்டு வருகிறது. இங்குள்ள, நெல் பிரித்தெடுக்கும் இயந்திரத்தை, த.மா.கா.,வை சேர்ந்த முன்னாள் ஊராட்சி தலைவர் பெருமாள் என்பவரது பெட்ரோல் பங்கிற்கு எடுத்துச் சென்று, நேற்று முன்தினம் இரவு, 8:00 மணியளவில் நெல் பிரித்தெடுக்கும் பணியை மேற்கொண்டனர்.
இது குறித்து, அப்பகுதியினர் சேலம் கலெக்டர், ஆத்துார் ஆர்.டி.ஓ., மற்றும் சேலம் நுகர்பொருள் வாணிப கழக கிடங்கு அலுவலர் உள்ளிட்டோருக்கு புகார் செய்தனர். அதன்படி நேற்று, ஆத்துார் வாணிப கழக கிடங்கு மேலாளர் ரவி உள்ளிட்ட அலுவலர்கள் ஆய்வு செய்தனர்.
இதுகுறித்து, கிடங்கு மேலாளர் ரவி கூறுகையில், ''நெல் கொள்முதல் கிடங்கில் இருந்து, நெல் பிரித்தெடுக்கும் இயந்திரம் வெல்டிங் வைப்பதற்கு எடுத்துச் சென்றபோது, பெருமாள் என்பவரது பெட்ரோல் பங்க்கில் நெல் பிரித்தெடுக்கும் பணிகளை மேற்கொண்டுள்ளனர். புளியங்குறிச்சி கிடங்கு பொறுப்பாளர் தர்மன், வாட்ச்மேன் பூவரசன் மற்றும் மூட்டை துாக்குபவர், 11 பேரிடம் விசாரணை செய்து, விளக்கம் பெறப்பட்டுள்ளது. பெருமாள் என்பவரிடமும் விசாரிக்கப்படும். விசாரணை அறிக்கை, சேலம் நுகர்பொருள் மாவட்ட அலுவலருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது,'' என்றார்.
முன்னாள் ஊராட்சி தலைவர் பெருமாள் கூறுகையில், ''அரசின் வேளாண் துறைக்கு, 7 ஆண்டாக விதை நெல் கொடுத்து வருகிறேன். கிடங்கில் சென்று நெல் பிரிக்கும்போது, இந்த விதை நெல்லுடன் மற்ற நெல் சேர்ந்துவிடும். வெல்டிங் வைப்பதற்கு எடுத்துச் சென்ற நெல் பிரித்தெடுக்கும் இயந்திரத்தை வைத்து, நெல் தரம் பிரித்து, அரசு வழங்கிய சாக்கு மூட்டைகளில், விதை நெல் பிடித்து வைத்துள்ளேன்,'' என்றார்.

Advertisement