சிவகங்கை மருத்துவக் கல்லுாரி பெண் டாக்டர் மீது தாக்குதல்

சிவகங்கை:சிவகங்கை அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் பெண் பயிற்சி டாக்டர் மீது மர்ம நபர் தாக்குதல் நடத்தியது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.

இங்கு 100 பயிற்சி டாக்டர்கள் பணிபுரிகின்றனர். அவர்கள் கல்லுாரிக்கு பின்புறம் உள்ள விடுதியில் தங்கியுள்ளனர். நேற்று முன்தினம் இரவு 11:00 மணிக்கு பயிற்சியை முடித்து விடுதிக்கு பெண் பயிற்சி டாக்டர் சென்றார். பின் தொடர்ந்த நபர் டீன் குடியிருப்பு அருகே சென்றபோது பெண் டாக்டர் முகத்தில் துணியை மூடி தாக்கினார். டூவீலர் சத்தம் கேட்டதும் அந்த நபர் அங்கிருந்து தப்பினார். சத்தம் கேட்டு அங்கு மருத்துவ மாணவர்கள் கூடினர்.

போலீசார் இரவு முழுவதும் மருத்துவக் கல்லுாரி வளாகம் முழுவதும் சோதனை மேற்கொண்டனர். எஸ்.பி., ஆஷிஷ் ராவத், கூடுதல் எஸ்.பி.,கள் கலைக்கதிரவன், பிரான்சிஸ், டி.எஸ்.பி., அமலஅட்வின், இன்ஸ்பெக்டர் அன்னராஜ் உள்ளிட்டோர் மருத்துவ மாணவர்கள், பயிற்சி டாக்டர்களிடம் விசாரித்தனர். கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர். தாக்கியவர் யார், எதற்காக எனத்தெரியவில்லை.

பணி புறக்கணிப்பு



பயிற்சி டாக்டர்கள் நேற்று காலை 10:00 மணிக்கு தங்களது பணியை புறக்கணித்து டீன் அலுவலகம் முன் கூடினர். டீனை சந்தித்து பணி பதுகாப்பு வழங்கவேண்டும்.கல்லுாரி வளாகம், விடுதி வளாகங்களில் உள்ள மின் விளக்குகள், கண்காணிப்பு கேமராக்களை முறையாக பராமரித்து இயக்க வேண்டும். இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்தனர்.

டீன் சத்தியபாமா கூறுகையில்‛‛இப்பிரச்னை தொடர்பாக கல்லுாரி நிர்வாகம் சார்பில் போலீசாரிடம் புகார் அளித்துள்ளோம். விசாரித்து வருகின்றனர் ''என்றார்.

Advertisement