பாரதியார் வீட்டின் கூரை இடிந்து சேதம்

துாத்துக்குடி:துாத்துக்குடி மாவட்டம், எட்டயபுரத்தில் பாரதியார் பிறந்த இல்லம், 1973ல் தமிழக அரசால் அரசுடைமையாக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது.

அவர் பயன்படுத்திய பொருட்கள், வாழ்க்கை குறிப்புகள் அந்த வீட்டில் காட்சிக்கு வைக்கப்பட்டு உள்ளன. பகுதி நேர நுாலகமும் செயல்பட்டு வருகிறது. செய்தி மக்கள் தொடர்பு துறை சார்பில் அங்கு பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

மிகவும் பழமையான அந்த வீட்டை முறையாக பராமரிக்க, தமிழ் ஆர்வலர்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்த நிலையில், பாரதியார் இல்லத்தின் முன்பகுதி கூரை நேற்று மாலை, 6:00 மணியளவில் திடீரென இடிந்து விழுந்தது.

பகல் நேரத்தில் இடிந்து விழுந்திருந்தால் உயிர் சேதம் ஏற்பட்டிருக்கும். பணியில் இருந்த பாதுகாவலர் அவசரமாக வெளியேறியதால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.

எட்டயபுரம் தாசில்தார் சுபா நேரில் விசாரணை நடத்தினார். மக்கள் யாரும் செல்லாத வகையில் தடுப்பு வைக்கப்பட்டுள்ளது. மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.

Advertisement