கூவத்தூரில் தலை துண்டிக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட ஆண் மான் 

கூவத்துார்:கூவத்துார் அருகே, தலை துண்டிக்கப்பட்ட நிலையில், ஆண் புள்ளிமான் உடல் மீட்கப்பட்டுள்ளது.

செங்கல்பட்டு மாவட்டம், கூவத்துார் பகுதியில் உள்ள பகிங்ஹாம் கால்வாய் ஓரத்தில், தலை துண்டிக்கப்பட்ட நிலையில் ஆண் புள்ளிமான் ஒன்று கிடந்துள்ளது.

நேற்று காலை இதைக்கண்ட அப்பகுதி மக்கள், வருவாய்த் துறையினர் மற்றும் வனத்துறையினருக்கு தகவல் அளித்துள்ளனர்.

சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர், உயிரிழந்த மானை ஆய்வு செய்ததில், 3 வயது மதிக்கத்தக்க ஆண் புள்ளி மான் எனத் தெரிந்தது.

பின், கூவத்துார் கால்நடை மருத்துவமனையில் மான் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு, அருகே உள்ள காப்புக்காட்டில் புதைக்கப்பட்டது.

வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய திட்டமிட்டு மானை பிடித்து, தலையை மட்டும் துண்டித்து கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்ற கோணத்தில், வனத்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

Advertisement