பதில் எங்கே?

'சிறிய வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம், எதிர்க்கட்சியினரை அடித்து துவம்சம் செய்து விடுகிறார்; கில்லாடிதான்...' என, தெலுங்கானா முதல்வரும், காங்கிரசைச் சேர்ந்தவருமான ரேவந்த் ரெட்டி குறித்து ஆச்சரியப்படுகின்றனர், சக அரசியல்வாதிகள்.

இம்மாநிலத்தில், ஆட்சியை பறிகொடுத்த முன்னாள் முதல்வரும், பாரத் ராஷ்ட்ர சமிதி தலைவருமான சந்திரசேகர ராவ், அதிலிருந்து மீண்டு வருவதற்கு எவ்வளவோ முயற்சி மேற்கொண்டு வருகிறார்.

ஆனால், அவரது முயற்சிகளை சாமர்த்தியமாக முறியடித்து விடுகிறார், ரேவந்த் ரெட்டி. 'தெலுங்கானாவில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தபின், எந்த உருப்படியான வளர்ச்சித் திட்டங்களும் நடக்கவில்லை...' என, சமீபத்தில் விமர்சித்திருந்தார், சந்திரசேகர ராவ்.

இதற்கு பதிலடி கொடுத்த ரேவந்த் ரெட்டி, 'கடந்த, 15 மாதங்களில், வெறும் இரண்டு நாட்கள் மட்டுமே சட்டசபைக்கு சந்திரசேகர ராவ் வந்துள்ளார். ஆனாலும், 15 மாதங்களுக்கான சம்பளத் தொகையான, 57 லட்சத்தையும் ஒரு பைசா பாக்கி வைக்காமல் பெற்றுள்ளார்.

'உழைக்காமல் மக்கள் வரிப்பணத்தை சம்பளமாக பெறுவதற்கு, அவரது மனசாட்சி எப்படி சம்மதிக்கிறது என பதில் சொல்வாரா...?' என்று, போட்டு தாக்கினார்.

'ரேவந்த் ரெட்டியை விட, அரசியலில் சந்திரசேகர ராவ் அனுபவசாலி. ஆயினும், சம்பள விஷயத்தில் சந்திரசேகர ராவிடம் இருந்து எந்த பதிலும் வரவில்லையே...' என்கின்றனர், தெலுங்கானா அரசியல்வாதிகள்.

Advertisement