'டவுட்' தனபாலு

3

புரட்சி பாரதம் கட்சியின் தலைவர் ஜெகன்மூர்த்தி: நாங்கள், பா.ஜ.,வுடன் கூட்டணியில் இல்லை. பா.ஜ.,வுடன் அ.தி.மு.க., கூட்டணி வைக்கிறது என, பழனிசாமி சொல்லவில்லை. அவர் சொன்ன பிறகு எங்களது கருத்தை நாங்கள் சொல்வோம். நாங்கள் பங்கேற்கும் கூட்டணியில், பூந்தமல்லி உள்ளிட்ட ஐந்து தொகுதிகளை கேட்போம்.

டவுட் தனபாலு: இப்ப, நீங்க ஒருத்தர் மட்டும்தான் அ.தி.மு.க., கூட்டணியில் ஜெயித்து எம்.எல்.ஏ.,வாக இருக்கீங்க... நீங்க கேட்கிற ஐந்து தொகுதிகளை எந்த கட்சியும் ஒதுக்குமா என்பது, 'டவுட்'தான்... தப்பித் தவறி ஒதுக்கிட்டாலும், நிறுத்துறதுக்கு உங்களிடம் வேட்பாளர்கள் இருக்காங்களா என்பது அதைவிட பெரிய, 'டவுட்!'


இந்திய கம்யூ., கட்சியின் மாநில செயலர் முத்தரசன்: எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி, மத்திய உள்துறை அமைச்சரை சந்திக்க வேண்டிய அவசியம் என்ன? கூட்டணி குறித்து பேசவில்லை. மக்கள் பிரச்னைகளை பேசியதாக, பழனிசாமி தெரிவித்துள்ளார். 'பா.ஜ.,வுடன் ஒட்டும் இல்லை; உறவும் இல்லை' எனக் கூறிய அவர், இரண்டு மணி நேரம் அமித் ஷாவுடன் பேசியுள்ளார். என்ன நிர்பந்தம், நெருக்கடி என தெரியவில்லை. உண்மை மெல்ல வெளிவரும்.

டவுட் தனபாலு:
பொறுப்பான எதிர்க்கட்சி தலைவர், தமிழகத்தின் நலன்கள் குறித்து மத்திய அமைச்சரை சந்திக்கக் கூடாது என்று ஏதாவது சட்டம் இருக்கா என்ன...? 2026 தேர்தல் களத்தில் எதிர்க்கட்சிகள் பிரிந்து நின்றால், ஈசியாக ஜெயித்து விடலாம் என்ற உங்க கனவுக்கு, இந்த சந்திப்பு வேட்டு வச்சிருப்பது, 'டவுட்'டே இல்லாம தெரியுது!


பா.ம.க., நிறுவனர் ராமதாஸ்: மத்திய அரசால் அறிவிக்கப்பட்ட, தொழில் துவங்க ஏற்ற மாநிலங்கள் பட்டியலில், கடந்த முறை மூன்றாவது இடத்தில் இருந்த தமிழகம், இம்முறை பட்டியலில் இருந்தே நீக்கப்பட்டுள்ளது. ஆனால், தி.மு.க., ஆட்சிக்கு வந்தபின், முதலீடுகள் குவிவதை போன்ற தோற்றம் ஏற்படுத்தப்படுகிறது. தமிழகத்திற்கு வந்துள்ள தொழில் முதலீடுகள் குறித்து, வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்.

டவுட் தனபாலு: 'பட்டியலில் இருந்து நீக்கியது மத்திய அரசின் சதி' என்று கூட தி.மு.க., அரசு சொல்லும்... ஒருவேளை, தமிழகத்துக்கு வந்த தொழில் முதலீடுகள் குறித்து, அவங்க வெள்ளை அறிக்கை வெளியிட்டாலும், அது ஒரே ஒரு, 'ஏ 4 பேப்பர்' அளவுக்கு தான் வரும் என்பதில், 'டவுட்'டே இல்லை!

Advertisement