சிந்திக்க விடுமா இந்த கூட்டம்?

ஏ.எஸ்.ஆதித்யா,
அருப்புக்கோட்டையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்:
தமிழகத்தில்
புதிதாக கட்சி துவங்கும் அரசியல்வாதிகளுக்கு ஒரு வியாதி உண்டு. 'திராவிட'
அல்லது 'கழகம்' என்ற வார்த்தை இடம்பெறாமல், அவர்களது கட்சியின் பெயர்
இருக்காது. விஜயகாந்த் மட்டும்தான் தேசிய என்ற வார்த்தையை கட்சியின்
பெயரில் சேர்த்தார்; ஆனால், அவரும் திராவிடத்தையும், கழகத்தையும்
விட்டுவைக்கவில்லை.
அத்துடன், கட்சி துவங்கும்போது, 'ஊழலில்
திளைக்கும் திராவிடக் கட்சிகளுக்கு மாற்றாக, புதிய சக்தியாக உருவெடுப்போம்,
வாரிசு அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைப்போம்' என்றெல்லாம் வீர வசனம்
பேசுவர். ஆனால், அடுத்த தேர்தலிலேயே, தி.மு.க., அல்லது அ.தி.மு.க.,
விடம், 'சீட்டு'க்காக சரணாகதி அடைந்து விடுவர். அன்று, தி.மு.க., வை
வசைபாடிய வைகோவும், கமல்ஹாசனும் இன்று, ஒன்றிரண்டு சீட்டுக்காக,
தி.மு.க.,வின் காலடியில் விழுந்து கிடப்பதைப் பார்த்து தமிழகமே
சிரிக்கிறது.
தங்கள் இருப்பைக் காட்டிக்கொள்ளவும்,
திராவிடக்கட்சிகளின் தயவைத் தக்க வைக்கவும், மத்திய அரசு கொண்டுவரும்
அனைத்து திட்டங்களையும் கண்ணை மூடி எதிர்ப்பது மட்டும் தான், இவர்களது
வேலை!
சர்வதேச அரங்கில் போட்டியிடும் திறன் உள்ள மாணவர் சமுதாயத்தை
உருவாக்கவேண்டும், தரமான மருத்துவக் கல்வியை நாடெங்கும் உறுதிப்படுத்த
வேண்டும், அன்னியர் ஊடுருவலைத் தடுக்கவேண்டும், ஒரே சமயத்தில் தேர்தல்
நடத்துவதன் வாயிலாக, பல ஆயிரம் கோடி ரூபாய்கள் விரயமாவதைத் தவிர்க்க
வேண்டும் என்ற அனைத்து மாநில நலன்களையும் கருத்தில் கொண்டுதான், மத்திய
அரசு பல திட்டங்களை கொண்டுவருகிறது.
மற்ற மாநிலங்கள் இருகரம் நீட்டி அவற்றை வரவேற்கும்போது, தமிழக அரசோ அரசியல் செய்ய மட்டுமே நினைக்கிறது!
அவ்வகையில்,
1986-ல் காங்கிரஸ் ஆட்சியில், ராஜிவ் மற்றும் நேருவின் பெயரில்
துவங்கப்பட்ட நவோதயா பள்ளிகள் இல்லாத ஒரே மாநிலம் தமிழகம். இதற்காக,
தமிழகத்திலுள்ள ஒவ்வொரு காங்கிரஸ்காரரும் வெட்கப்பட வேண்டும். நவோதயா
பள்ளிகளில் படித்து பல்வேறு துறைகளில், தேசிய மற்றும் சர்வதேச அளவில்
சாதனையாளர்களாக ஜொலித்துக் கொண்டிருப்போரின் பட்டியல் மிக நீண்டது.
இதை,
இங்குள்ள ஒவ்வொரு தி.மு.க., தொண்டனும் அறிந்தால்தான், தாம் இத்தனை காலமாக
ஒரு தவறான இயக்கத்தால், முட்டாளாக்கப்பட்டு வரும் உண்மை புலப்படும்.
ஆனால், இவர்கள் எல்லாம் சிந்திக்கத் துவங்கி விட்டால், திராவிடம் என்ற
கட்டமைப்பின் அஸ்திவாரமே ஆட்டம் கண்டுவிடுமே!
சிந்திக்க விட்டு விடுவரா என்ன?
சாணக்கியத்தனம் இல்லையே!
பி.என்.கபாலி, சென்னையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நீண்ட நெடிய அரசியல் வாழ்க்கைக்கு அடித்தளமிட்டது, மக்கள் செல்வாக்கு என்பதை விட, அவருடைய சாதுர்யமே!
அவருக்கு, 'ஈகோ' இருந்ததில்லை; தன்னம்பிக்கை இருந்தது. வளைந்து, நிமிர்ந்து, குழைந்து, எதிர்த்து, அணுகி, விலகி, பகைத்து, உறவாடி, கோபித்து, சிரித்து... இப்படி தேவைக்கேற்ப வினையாற்றி, தன் அரசியல் இருப்பை தக்க வைத்துக் கொண்டார்.
மத்திய அரசை எதிர்த்து வீர வசனம் பேசுவார்; ஆனால், அதன் அளப்பரிய சக்தியை புரிந்து வைத்திருந்தார். மாநில கட்சிதான் நடத்தினார்; ஆனால், மத்தியில் ஆட்சி, அதிகாரம் பெறுவது மிக முக்கியம் என்ற தெளிவு அவருக்கு இருந்தது.
இந்த தெளிவு ஜெயலலிதா உட்பட, அ.தி.மு.க., தலைவர்கள் எவருக்கும் இல்லை!
பெயரளவில், 'அகில இந்திய' என்ற அடைமொழியை கொண்டிருந்தாலும், உண்மையில் மாநில கட்சியாக சுருங்கி கிடந்தது, அ.தி.மு.க., அத்தகைய அடைமொழி இல்லாத தி.மு.க.,வோ, அகில இந்திய கட்சியாக கோலோச்சியது!
மத்தியில் வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது, தமிழகத்தை ஆள்வது, முதல்வர் ஜெயலலிதாவா அல்லது மத்தியில் இடம் பெற்றிருந்த தி.மு.க.,வா என்று கேட்கும் அளவிற்கு அவர்களின் ஆதிக்கம் இருந்தது.
சென்னை கத்திபாரா சந்திப்பில், மேம்பால பணிகள் மேற்கொண்ட அன்றைய மத்திய நெடுஞ்சாலை துறை அமைச்சர் டி.ஆர்.பாலு, ஜெயலலிதாவை பொருட்படுத்தவில்லை. சில அரசு விழாக்களில், முதல்வர் ஜெயலலிதா முற்றிலும் புறக்கணிக்கப்பட்டு, எதிர்க்கட்சி தலைவர் கருணாநிதி முன்னிறுத்தப்பட்டார்.
ஆனால், 1998 முதல், மத்தியில் ஆதிக்கம் செலுத்தக் கூடிய வாய்ப்பு இருந்தும், முன்யோசனை இன்றி கெடுத்துக் கொண்டார், ஜெயலலிதா. சாமர்த்தியமாக அதை அடைந்த, தி.மு.க., 2014 வரை தங்களுக்கு வேண்டிய வசதிகள் அனைத்தையும் பெற்றுக் கொண்டது.
அதேபோன்று, சர்க்காரியா கமிஷன் அறிக்கையை, காங்கிரஸ் உதவியோடு ஒன்றுமில்லாமல் செய்தார், கருணாநிதி. ஆனால், சொத்து குவிப்பு வழக்கில் பா.ஜ., உதவியோடு அவ்வாறு செய்துகொள்ள தெரியவில்லை, ஜெயலலிதாவிற்கு! இன்றும் கூட மத்திய அரசில் ஒட்டிக்கொள்ள, தி.மு.க., தயார்; மோடியும், அமித் ஷாவும் தான் அதை விரும்பவில்லை.
ஜெயலலிதா போன்றே அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமியும், மத்திய அரசின் நேசத்தை பெற்று, தன்னை பலப்படுத்திக் கொள்ளும் யுக்தியை அறியவில்லை. இத்தனைக்கும் பழனிசாமிக்கு அதிக முக்கியத்துவம் தந்தார், மோடி. மத்தியில் ஓரிரு அமைச்சர் பதவி கிடைக்கும் வாய்ப்பும் இருந்தது. அதை பயன்படுத்திக் கொள்ளும் சாதுரியம் இல்லாமல் கோட்டை விட்டார்.
எதிர்க்கட்சி ஆனதிலிருந்து, பா.ஜ.,வுடன் அணுக்கமாய் நின்று, அரசியல் செய்திருந்தால், இன்று அவரது பலம் பல மடங்கு கூடியிருக்கும்; தி.மு.க.,வில் ஓர் ஏக்நாத் ஷிண்டேவை கூட உருவாக்கியிருக்கலாம். ஆனால், 60க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏ.,க்களுடன், பலமான எதிர்க்கட்சியாக இருந்தும், இன்று அ.தி.மு.க., சுணங்கிக் கிடக்க காரணம், திறனற்ற தலைமை!
'சிப்பாயை கண்டஞ்சுவார், ஊர் சேவகர் வரக்கண்டு பயந்தொளிவார்' என்ற பாரதியின் பாடல் வரிகளை போல், அண்ணாமலையிடம் அச்சம், பன்னீர் செல்வத்தின் மீது பயம், தினகரனை கண்டு திகில் என்று கொஞ்சமும் தன்னம்பிக்கையற்ற தலைவராக இருக்கிறார். உண்மை எதிரியான, தி.மு.க.,வை எதிர்த்து அரசியல் செய்யாமல், நான்காண்டுகளை வீணடித்து விட்டார், பழனிசாமி.
தற்போது, அமித் ஷாவை சந்தித்துள்ளார்; இப்போதாவது, அரசியல் மதியூகத்துடன் நடந்து கொள்வாரா இல்லை சிறுபான்மையினர் வருவர், விஜய் வருவார் என்று பகல் கனவு கண்டு கொண்டிருப்பாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்!

மேலும்
-
கடன் தொல்லையால் அவதி: சொந்த வீட்டில் கொள்ளை நாடகமாடி சிக்கிய நபர்
-
நிதி முறைகேடு குற்றம் உறுதி; பிரான்ஸ் வலதுசாரி கட்சி பெண் தலைவருக்கு தடை
-
ஜிப்லியால் முடங்கிய சாட்ஜிபிடி: சி.இ.ஓ., விடுத்த அன்பு கட்டளை!
-
ஜிப்லியில் இணைந்தார் இ.பி.எஸ்; காலத்தால் அழியாத கலையுடன் கலக்கிறேன் என பதிவு
-
சத்தீஸ்கரில் தொடரும் என்கவுன்டர்; நக்சல் தலைவி சுட்டுக்கொலை
-
நெய்வேலி அனல் மின் நிலையம் முற்றுகை: விவசாயிகள் 400 பேர் கைது