அமலாக்கத்துறை நடத்திய விதம் மனிதத்தன்மையற்ற செயல்: ஐகோர்ட்டில் டாஸ்மாக் அதிகாரிகள் முறையீடு

92

சென்னை : 'அமலாக்கத்துறை சோதனையின் போது தாங்கள் நடத்தப்பட்ட விதம் சட்டவிரோதமானது; மனிதத்தன்மை அற்ற செயல்' என, சென்னை உயர் நீதிமன்றத்தில், டாஸ்மாக் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


தமிழகத்தில், 'டாஸ்மாக்' தலைமை அலுவலகத்தில், மார்ச் 6 முதல் 8ம் தேதி வரை, அமலாக்கத்துறை சோதனை நடத்தியது. இந்த சோதனையை எதிர்த்து, சென்னை உயர் நீதிமன்றத்தில், தமிழக உள்துறை செயலர், 'டாஸ்மாக்' நிர்வாக இயக்குனர் தரப்பில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த வழக்கில், டாஸ்மாக் நிர்வாக இயக்குனர், டாஸ்மாக் தலைமை கணக்கு அதிகாரி உள்பட பெண் அதிகாரிகளும் பிரமாண மனு தாக்கல் செய்துள்ளனர்.

அதன் விபரம்



அமலாக்கத்துறை சோதனையின் போது, நீண்ட நேரம் சட்ட விரோதமாக அடைத்து வைக்கப்பட்டோம். உடல் மற்றும் மன ரீதியாக துன்புறுத்தப்பட்டோம்.காலையில் பணிக்கு வந்த எங்களை, நள்ளிரவில் தான் வீட்டுக்கு அனுப்பினர். மறுநாள் விரைவாக வரும்படி கூறினர்.

இதன் காரணமாக, மூன்று நாட்கள் துாக்கமின்றி பாதிக்கப்பட்டோம். பெண் ஊழியர்களின் பாதுகாப்பு குறித்து கவலைப்படாமல் நள்ளிரவில் வீட்டிற்கு அனுப்பினர். அதிகாரிகள், ஊழியர்களின் மொபைல் போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதன் காரணமாக, குடும்பத்தினரிடம் தகவல் கூட சொல்ல முடியாத நிலை ஏற்பட்டது.

விசாரணையில் நேரடியாக ஈடுபடாத ஊழியர்களுக்கு, இந்த சோதனையால் தேவையற்ற சிரமத்தை ஏற்படுத்தினர். விசாரணை என்ற போர்வையில், எந்தவொரு ஊழியரும், குறிப்பாக பெண்கள், இதுபோன்ற ஒரு சோதனையை சந்திக்க வேண்டியதில்லை.

அமலாக்கத்துறையின் இந்த நடவடிக்கை சட்டவிரோதமானது மட்டுமன்றி, மனிதாபிமானமற்ற நடவடிக்கை. அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனைக்காக, மார்ச் 6ம் தேதி காலை 11:54 மணிக்கு நுழைந்து, 8ம் தேதி இரவு 11:46 மணிக்கு வெளியேறி உள்ளனர். சோதனை தொடர்பாக மூன்று நாட்கள், 'சிசிடிவி' காட்சிகள் விபரங்களும் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement