தற்கொலை செய்ய போவதாக கணவரை மனைவி மிரட்டுவது சித்ரவதையே: மும்பை ஐகோர்ட்

1

மும்பை: தற்கொலை செய்யப் போவதாக மிரட்டுவதும், தற்கொலை முயற்சி செய்வதும், சித்ரவதை செய்வதாகவே கருதப்படும் என, விவாகரத்து வழக்கில் மும்பை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மஹாராஷ்டிராவைச் சேர்ந்த தம்பதிக்கு, 2009ல் திருமணமானது; பெண் குழந்தையும் உள்ளது. இந்நிலையில், கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடால், மனைவி தன் பெற்றோர் வீட்டுக்கு சென்றுவிட்டார்.

கணவர் தொடர்ந்த வழக்கை விசாரித்த குடும்ப நீதிமன்றம், விவாகரத்து வழங்கி உத்தரவிட்டது. இதை எதிர்த்து மனைவி தொடர்ந்த வழக்கை விசாரித்த மும்பை உயர் நீதிமன்றத்தின் அவுரங்காபாத் கிளை அமர்வு, விவாகரத்தை உறுதி செய்து உத்தரவு பிறப்பித்தது.

தற்போது வெளியாகியுள்ள அந்த உத்தரவில் அமர்வு கூறியுள்ளதாவது: தற்கொலை செய்வதாக மிரட்டுவதும், தற்கொலை முயற்சி செய்வதும், சித்ரவதை செய்வதாகவே கருதப்படும். இந்த வழக்கில், தற்கொலை செய்யப் போவதாக மனைவி பல முறை மிரட்டியுள்ளார்.

மேலும் ஒரு முறை தற்கொலை முயற்சியும் செய்துள்ளார். இதற்கான ஆதாரங்கள் அவற்றை உறுதி செய்கின்றன. அதனால், விவாகரத்து வழங்கி குடும்ப நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை உறுதி செய்கிறோம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement