பிறந்தேன் பிறந்து தெரியும் ஆனால் அன்னையைக் கண்டதில்லை

10





பிறந்தேன் பிறந்து தெரியும் ஆனால் அன்னையைக் கண்டதில்லை
ஆலிவ் ரிட்லி ஆமைக்குஞ்சுகளின் கதை


இந்த உலகில் பிறக்கும் எந்த உயிரினம் என்றாலும் அதற்கு தாய்ப்பாசம் கிடைத்துவிடும் ஆனால் தாய் யார் என்றே தெரியாமல் அதை தெரிந்து கொள்ளவும் முடியாமல் பிறந்தது முதல் சவாலை சந்தித்து வாழ்ந்து வரும் இனம்தான் ஆலிவ் ரிட்லி ஆமை இனமாகும்.

கடல் பல்வேறு உயிரினங்களைக் கொண்டுள்ளது, அதில் ஆமை உயிரினமும் ஒன்று.இந்த ஆமைகளில் பல்வேறு வகைகள் உண்டு அதில் ஒருவகைதான் ஆலிவ் ரிட்லி. சாம்பல் பச்சை நிறத்தைக் கொண்டுள்ளது.

இந்தியப் பெருங்கடலில் அதிகம் வாழும் இந்த உயிரினம் கடல் சூழலியல் மற்றும் மீன் வளத்தை பாதுகாப்பதில் பெரும் பங்கு வகிக்கின்றன.

பிறக்கும் போது உள்ளங்கையளவே இருக்கும் நன்று வளர்ந்த பிறகு 70 செமீ வரை நீளமும்,50 கிலோ வரை எடையும் கொண்டிருக்கும்.

18 வயதானதும் தாயாகும் தன்மையை அடைகிறது, தன் இணையுடன் சேர்ந்த பிறகு அதன் துணையுடன் கடற்கரை வந்து அக்டோபர் முதல் ஜனவரி வரை கடற்கரை ஒரம் மண்ணைத் தோண்டி நுாறில் இருந்து நுாற்றைம்பது முட்டைகளை இட்டு செல்லும்,இவை நாற்பது முதல் நாற்பத்தைந்து நாட்களில் குஞ்சாக வெளிவரும்.

தாய் ஆமை முட்டையிடுவதற்கு முன் கடற்கரைக்கு பலமுறை வரும், கடற்கரை அசுத்தமாக இருந்தாலோ சந்தேகப்படும்படியாக நாய் உள்ளீட்ட முட்டைகளுக்கு தீங்கு விளைவிக்கும் உயிரினங்களின் நடமாட்டம் இருந்தாலோ முட்டையிடாமல் கடலுக்குள் திரும்பிச் சென்றுவிடும்.

நள்ளிரவு அல்லது பின்னிரவில் கடலும் கடற்கரையும் அமைதியாக இருக்கும் காலகட்டத்தில் கரைக்கு வந்து மண்ணைத்தோண்டி குழியமைத்து அதற்குள் முட்டையிட்டுவிட்டு திரும்பச் சென்றுவிடும்.

இந்த ஆமை முட்டைகளை விலங்குகள் பெருமளவில் வேட்டையாடிதால் அதன் இனமே பெரிதும் அருகி வந்தது, இதன் காரணமாக உலக அளவில் விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டு அரசும் தொண்டு நிறுவனங்களும் கைகோர்த்து ஆமை முட்டைகளை பாதுகாப்பதில் தற்போது அக்கறை செலுத்தி வருகின்றனர்.

சென்னையில் வனத்துறையும், மாணவர் கடல் ஆமை பாதுகாப்பு வலையமைப்பு என்ற தொண்டு நிறுவனமும் இணைந்து பெசண்ட் நகர் கடற்கரையில் கூண்டு அமைத்து ஆமை முட்டைகளை சேகரித்து வைத்துள்ளனர்.

இந்த முட்டைகளை சேகரிப்பதற்காக 'டர்டில் வாக்' என்ற அமைப்பையும் ஏற்படுத்தியுள்ளனர், பின்னிரவில் கடற்கரை ஒரம் நடந்து ஆமை முட்டையிட்ட இடங்களை கண்டுணர்ந்து அந்த முட்டைகளை சேகரித்து இந்த கூண்டுக்குள் பாதுகாப்பாக கொண்டுவந்து வைத்துவிடுவர்.கூடவே ஆமை குஞ்சாக வெளிவரும் தேதியையும் குறித்து வைத்துவிடுவர்.
Latest Tamil News
குறிப்பிட்ட தேதி வந்ததும் இரவு 7 மணியளவில் ஆமைக்குஞ்சுகளை கடற்கரை ஒரத்தில் திறந்துவிடுவர், அதற்கு முன் இந்த இனத்தை பாதுகாப்பதன் அவசியம் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொள்வர்.
Latest Tamil News
திறந்துவிடப்படும் ஆமைக்குஞ்சு கடலுக்குள் செல்வதற்கு ஏதுவாக மெல்லிய டார்ச் லைட்டை கடலுக்குள் இருந்து அடித்து வெளிச்சம் ஏற்படுத்துவர், அந்த வெளிச்சத்தை வைத்து சிறிது துாரம் தனது துடுப்பு போன்ற பகுதியை அசைத்து அசைத்து மண்ணில் ஊர்ந்து சென்று கடலை அடைந்து கடலுக்குள் சென்றுவிடும்.

இந்த ஆமைக்குஞ்சை உண்பதற்காகவே சிலவகை மீன்கள் கடற்கரையோரம் உலாவரும், அவைகளிடம் பல ஆமைக்குஞ்சுகள் பல மாட்டிக் கொண்டு உணவாகிவிடும் இது தவிர்க்கமுடியாதது அது ஒரு உயிர்ச்சங்கிலி.அந்த மீன்களிடம் இருந்து தப்பி கடலுக்குள் செல்லும் ஆமைகள் பின்னர் மீனவர்கள் விரிக்கும் வலையில் மாட்டிக் கொள்ளாமல் தப்பிக்க வேண்டும், அதன்பிறகு திடீரென மாறும் கடல்வெப்பத்தை தாங்கிக் கொள்ளவேண்டும்,பின்னர் வேட்டையாடும் மனித மிருககங்களிடம் இருந்து தப்பிக்வேண்டும், இப்படி பிறந்தது முதலே சவாலை சந்தித்து வாழ்ந்து வளர்ந்து தனது சந்ததியை பெருக்கவேண்டும்.
Latest Tamil News
ஆயிரம் ஆமைக்குஞ்சுகளை கடலுக்குள் விட்டால் அதில் ஒன்றோ இரண்டோதான் தனது அடுத்த வாரிசை உருவாக்கும் அளவிற்கு உருவாகும்.இதன் காரணமாக அழிந்துவரும் உயிரினங்களில் ஒன்றாக இந்த ஆலிவ் ரிட்லி ஆமை பட்டியலிப்படப்பட்டுள்ளது.அந்த பட்டியலில் இருந்து இந்த ஆமை தன்னை எப்படியாவது பாதுகாத்துக் கொள்ளும், குறைந்தபட்சமாக நாம் அதற்கு தொந்திரவுதராமல் இருக்க வேண்டும்
Latest Tamil News
அதற்கான விழிப்புணர்வை குழந்தைகளிடம் இருந்தே விதைக்கவேண்டும்,விதைப்பீர்களா?

-எல்.முருகராஜ்

Advertisement