எழுச்சி பெறுமா சென்னை அணி: ராஜஸ்தானுடன் மோதல்

கவுகாத்தி: அசாமின் கவுகாத்தியில் இன்று நடக்கும் பிரிமியர் லீக் போட்டியில் சென்னை, ராஜஸ்தான் அணிகள் மோதுகின்றன. இதில், தோனி முன்னதாக களமிறங்க வேண்டுமென ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.

சென்னை அணி முதல் சவாலில் மும்பையை சாய்த்தது. நேற்று முன் தினம் நடந்த இரண்டாவது போட்டியில் பெங்களூருவிடம் 50 ரன் வித்தியாசத்தில் வீழ்ந்தது. சேப்பாக்கம் மைதானத்தில் 17 ஆண்டுகளுக்கு பின் பெங்களூருவிடம் தோற்றதால், ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

ரசிகர்கள் எதிர்பார்ப்பு: இப்போட்டியில் 'டாஸ்' வென்ற சென்னை அணி 'பவுலிங்' தேர்வு செய்தது தவறு. பீல்டிங், பவுலிங், பேட்டிங் என எதுவும் எடுபடவில்லை. அணியை மீட்பார் என எதிர்பார்க்கப்பட்ட 'தல' தோனி, 9வது இடத்தில் களமிறங்கினார். குர்ணால் பாண்ட்யா வீசிய கடைசி ஓவரில் 2 சிக்சர், ஒரு பவுண்டரி அடித்து ஆறுதல் தந்தார். 16 பந்தில் 30 ரன்* எடுத்தார். அஷ்வினுக்கு முன்னதாக வந்திருந்தால், அதிக பந்துகளை எதிர்கொண்டு தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கலாம். இன்று போட்டியின் நிலைமைக்கு ஏற்ப, தோனி முன்னதாக களமிறங்க வேண்டும்.

துவக்கத்தில் ரச்சின் ரவிந்திரா மட்டுமே விளாசுகிறார். கேப்டன் ருதுராஜ், தீபக் ஹூடா, ஷிவம் துபே தடுமாறுவது பலவீனம். இவர்கள் இன்று சுதாரிக்க வேண்டும். கவுகாத்தி பர்சாபரா மைதான ஆடுகளம் ஓரளவுக்கு 'ஸ்பின்னர்'களுக்கு கைகொடுக்கும். அனுபவ அஷ்வின், ஜடேஜா விக்கெட் வீழ்த்த முடியாமல் திணறுவது பலவீனம். நுார் கைகொடுப்பது பலம். 'வேகத்தில்' மிரட்ட பதிரானா, கலீல் அகமது உள்ளனர்.


ஜெய்ஸ்வால் நம்பிக்கை: ராஜஸ்தான் அணி கேப்டனாக சரியான நேரத்தில் சரியான முடிவுகளை எடுக்க தவறுகிறார் ரியான் பராக். பட்லர் போன்ற அதிரடி வீரர்கள் இம்முறை இல்லாதது பலவீனம். ஜெய்ஸ்வால், சஞ்சு சாம்சன், நிதிஷ் ராணா, துருவ் ஜுரலை நம்பி களமிறங்குகிறது. 'வேகத்திற்கு' ஆர்ச்சர், தேஷ்பாண்டே, சந்தீப் சர்மா உள்ளனர். தரமான 'ஸ்பின்னர்' இல்லாதது பலவீனம். இதை பயன்படுத்தி சென்னை அணி வெற்றிப்பாதைக்கு திரும்பலாம்.



தவிப்பு ஏன்


ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் வாட்சன் கூறுகையில்,''சென்னை அணி சரியான 'பேட்டிங்' வரிசையை கண்டறிய முடியாமல் தவிக்கிறது. தரமான துவக்க வீரர் கேப்டன் ருதுராஜ் இருக்கும் போது, ராகுல் திரிபாதியை முதலில் களமிறக்குகின்றனர். சாம் கர்ரான் 7வது இடத்திற்கு பொருத்தமானவர். அவர் 5வது இடத்தில் வருகிறார். 43 வயதிலும் தோனி அசத்துகிறார். ஆனால் 'டெயிலெண்டர்' போல 9வது இடத்தில் வருவது வியப்பு அளிக்கிறது. இவர் முன்னதாக களமிறங்குவதே சிறந்தது. தீபக் ஹூடா தடுமாறுகிறார். இதே பேட்டிங் வரிசை தொடர்ந்தால், 'ரிஸ்க்' அதிகம். உரிய மாற்றங்களை செய்வது அவசியம்,''என்றார்.

Advertisement