குஜராத் அணிக்கு முதல் வெற்றி: சாய் சுதர்சன் அரைசதம் விளாசல்

ஆமதாபாத்: சாய் சுதர்சன் அரைசதம் கடந்து கைகொடுக்க குஜராத் அணி 36 ரன் வித்தியாசத்தில் முதல் வெற்றி பெற்றது. மும்பை அணி மீண்டும் தோல்வியடைந்தது.

குஜராத்தின் ஆமதாபாத்தில் உள்ள உலகின் பெரிய மோடி மைதானத்தில் நடந்த பிரிமியர் லீக் போட்டியில் குஜராத், மும்பை அணிகள் மோதின. 'டாஸ்' வென்ற மும்பை அணி கேப்டன் ஹர்திக் பாண்ட்யா 'பவுலிங்' தேர்வு செய்தார்.
சுதர்சன் அபாரம்: குஜராத் அணிக்கு கேப்டன் சுப்மன் கில், சாய் சுதர்சன் ஜோடி நல்ல துவக்கம் கொடுத்தது. பவுல்ட் வீசிய 3வது ஓவரில் 2 பவுண்டரி விரட்டிய சுதர்சன், முஜீப் உர் ரஹ்மான் வீசிய 5வது ஓவரில் ஒரு பவுண்டரி, ஒரு சிக்சர் விளாசினார். தீபக் சகார் வீசிய 6வது ஓவரில் ஒரு சிக்சர், ஒரு பவுண்டரி அடித்தார் கில். முதல் விக்கெட்டுக்கு 78 ரன் சேர்த்த போது பாண்ட்யா 'வேகத்தில்' கில் (38) வெளியேறினார். சான்ட்னர் வீசிய 10வது ஓவரில் வரிசையாக ஒரு சிக்சர், ஒரு பவுண்டரி அடித்த பட்லர் (39) நம்பிக்கை தந்தார். பொறுப்பாக ஆடிய சுதர்சன், 33 பந்தில் அரைசதம் எட்டினார். ஷாருக்கான் (9) சோபிக்கவில்லை. பவுல்ட் 'வேகத்தில்' சுதர்சன் (63) வெளியேறினார். ரூதர்போர்ட் (18) ஆறுதல் தந்தார்.


குஜராத் அணி 20 ஓவரில், 8 விக்கெட்டுக்கு, 196 ரன் எடுத்தது. ரபாடா (7) அவுட்டாகாமல் இருந்தார்.

சிராஜ் அசத்தல்: கடின இலக்கை விரட்டிய மும்பை அணிக்கு, சிராஜ் தொல்லை தந்தார். இவரது 'வேகத்தில்' ரோகித் (8), ரிக்கிள்டன் (6) போல்டாகினர். பின் இணைந்த திலக் வர்மா, சூர்யகுமார் யாதவ் ஜோடி கைகொடுத்தது. சிராஜ், இஷாந்த் சர்மா, சாய் கிஷோர் பந்தில் தலா ஒரு சிக்சர் பறக்கவிட்டார் சூர்யகுமார். மூன்றாவது விக்கெட்டுக்கு 62 ரன் சேர்த்த போது பிரசித் கிருஷ்ணா பந்தில் திலக் (39) அவுட்டானார். சாய் கிஷோர் 'சுழலில்' ராபின் மின்ஸ் (3) சிக்கினார். பொறுப்பாக ஆடிய சூர்யகுமார் (48) அரைசத வாய்ப்பை இழந்தார்.

ரபாடா 'வேகத்தில்' கேப்டன் பாண்ட்யா (11) 'பெவிலியன்' திரும்பினார். பின் இணைந்த நமன் திர் (18*), சான்ட்னர் (18*) ஜோடி ஆறுதல் தந்தது. மும்பை அணி 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 160 ரன் மட்டும் எடுத்து தோல்வியடைந்தது.




அதிவேக 1000


பிரிமியர் லீக் அரங்கில், எந்த ஒரு மைதானத்தில் குறைந்த இன்னிங்சில் 1000 ரன்னை எட்டிய 2வது வீரரானார் சுப்மன் கில். இவர், ஆமதாபாத், மோடி மைதானத்தில் 20 இன்னிங்சில், இந்த இலக்கை எட்டினார். முதலிடத்தில் கிறிஸ் கெய்ல் (19 இன்னிங்ஸ், இடம்: பெங்களூரு, சின்னசாமி மைதானம்) உள்ளார்.


ராசியான ஆமதாபாத்
குஜராத் வீரர் சாய் சுதர்சனுக்கு, ஆமதாபாத் மைதானம் மிகவும் ராசியானது. இவர், கடைசியாக இங்கு விளையாடிய 4 பிரிமியர் லீக் போட்டியில் 84*, 103, 74, 63 ரன் எடுத்தார்.

'ஹாட்ரிக்' விக்கெட்
குஜராத்தின் சுதர்சன் (18.6 ஓவர்), திவாட்யா (19.1), ரூதர்போர்ட் (19.2) வரிசையாக அவுட்டாக மும்பை அணிக்கு 'ஹாட்ரிக்' விக்கெட் கிடைத்தது.

Advertisement