கோல்கட்டா அணி முதல் வெற்றி: குயின்டன் அரைசதம் விளாசல்

கவுகாத்தி: குயின்டன் டி காக் அரைசதம் கடந்து கைகொடுக்க கோல்கட்டா அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் ராஜஸ்தானை வீழ்த்தி, முதல் வெற்றி பெற்றது.

அசாமின் கவுகாத்தியில் நடந்த பிரிமியர் லீக் போட்டியில் ராஜஸ்தான், 'நடப்பு சாம்பியன்' கோல்கட்டா அணிகள் மோதின. கோல்கட்டா 'லெவன்' அணியில் சுனில் நரைனுக்கு பதிலாக மொயீன் அலி தேர்வானார். ராஜஸ்தான் 'லெவன்' அணியில் பசல்ஹக் பரூக்கி நீக்கப்பட்டு வணிந்து ஹசரங்கா இடம் பெற்றார். 'டாஸ்' வென்ற கோல்கட்டா அணி 'பவுலிங்' தேர்வு செய்தது.

'சுழல்' ஜாலம்: ராஜஸ்தான் அணிக்கு சஞ்சு சாம்சன் (13) ஏமாற்றினார். ஸ்பென்சர் ஜான்சன் வீசிய 3வது ஓவரில் ஒரு பவுண்டரி, ஒரு சிக்சர் விளாசினார் யாஷஸ்வி ஜெய்ஸ்வால். ஹர்ஷித் ராணா, வைபவ் அரோரா பந்தில் தலா ஒரு சிக்சர் பறக்கவிட்ட கேப்டன் ரியான் பராக் (25), வருண் சக்ரவர்த்தி 'சுழலில்' சிக்கினார். மொயீன் அலி பந்தில் ஜெய்ஸ்வால் (29) அவுட்டானார். வணிந்து ஹசரங்கா (4), நிதிஷ் ராணா (8) நிலைக்கவில்லை.


பொறுப்பாக ஆடிய துருவ் ஜுரெல், ஹர்ஷித் ராணா வீசிய 14, 17வது ஓவரில் தலா 2 பவுண்டரி விரட்டினார். 'இம்பாக்ட்' வீரர் சுபம் துபே (9) சோபிக்கவில்லை. ஹர்ஷித் 'வேகத்தில்' ஜுரெல் (33) போல்டானார். ஷிம்ரன் ஹெட்மயர் (7) நிலைக்கவில்லை. ஹர்ஷித், ஜான்சன் பந்தில் தலா ஒரு சிக்சர் அடித்த ஜோப்ரா ஆர்ச்சர் (16) ஆறுதல் தந்தார்.

ராஜஸ்தான் அணி 20 ஓவரில், 9 விக்கெட்டுக்கு 151 ரன் எடுத்தது. மகேஷ் தீக் ஷனா (1), துஷார் தேஷ்பாண்டே (2) அவுட்டாகாமல் இருந்தனர்.

குயின்டன் அபாரம்: எட்டக்கூடிய இலக்கை விரட்டிய கோல்கட்டா அணிக்கு மொயீன் அலி, குயின்டன் டி காக் ஜோடி துவக்கம் தந்தது. ஜோப்ரா ஆர்ச்சர் வீசிய 3வது ஓவரில் ஒரு பவுண்டரி, ஒரு சிக்சர் விளாசிய குயின்டன், மகேஷ் தீக் ஷனா பந்தில் ஒரு சிக்சர் அடித்தார். தொடர்ந்து அசத்திய குயின்டன், ரியான் பராக், சந்தீப் சர்மா பந்தில் தலா ஒரு பவுண்டரி விரட்டினார். முதல் விக்கெட்டுக்கு 41 ரன் சேர்த்த போது மொயீன் (5) 'ரன் அவுட்' ஆனார்.

வணிந்து ஹசரங்கா பந்தை பவுண்டரிக்கு அனுப்பிய கேப்டன் ரஹானே, தீக் ஷனா பந்தில் ஒரு சிக்சர் அடித்தார். ஹசரங்கா 'சுழலில்' ரஹானே (18) சிக்கினார். ஹசரங்கா பந்தில் சிக்சர் விளாசிய குயின்டன், 36 பந்தில் அரைசதம் கடந்தார். தொடர்ந்து அசத்திய குயின்டன், ரியான் பராக் பந்தில் ஒரு சிக்சர் அடித்தார். இவருக்கு ஒத்துழைப்பு தந்த ரகுவன்ஷி, ஹசரங்கா, நிதிஷ் ராணா பந்தில் தலா ஒரு பவுண்டரி விரட்டினார். ஆர்ச்சர் வீசிய 18 வது ஓவரில் ஒரு பவுண்டரி, 2 சிக்சர் விளாசிய குயின்டன் முதல் வெற்றியை உறுதி செய்தார்.

கோல்கட்டா அணி 17.3 ஓவரில் 2 விக்கெட்டுக்கு 153 ரன் எடுத்து வெற்றி பெற்றது. குயின்டன் (97* ரன், 6 சிக்சர், 8 பவுண்டரி), ரகுவன்ஷி (22*) அவுட்டாகாமல் இருந்தனர்.
ஆட்ட நாயகன் விருதை குயின்டன் டி காக் வென்றார். கோல்கட்டா அணி, நடப்பு சீசனில் முதல் வெற்றியை பதிவு செய்தது. ஏற்கனவே ஐதராபாத் அணியிடம் வீழ்ந்த ராஜஸ்தான், தொடர்ந்து 2வது தோல்வியை பெற்றது.

Advertisement