போதை பொருட்கள் விற்றால் கடைகள் உரிமம் ரத்து: கலெக்டர்

திருத்தணி:திருத்தணி ஒன்றியம் சத்ரஞ்ஜெயபுரம் ஊராட்சியில், நேற்று உலக தண்ணீர் தினத்தையொட்டி, சிறப்பு கிராம சபை கூட்டம் நடந்தது. கலெக்டர் பிரதாப் தலைமை வகித்தார். திருத்தணி தி.மு.க., - எம்.எல்.ஏ., சந்திரன் முன்னிலை வகித்தார்.

கூட்டத்தில், கலெக்டர் பிரதாப் பேசியதாவது:

தண்ணீரை சேமித்து சிக்கனமாக உபயோகம் செய்ய வேண்டும். நிலத்தடி நீரை மாசுபடுத்தாமல், உங்கள் கழிவுநீரை கால்வாய்கள் அமைத்து முறையாக வெளியேற்ற வேண்டும். மேலும், குளம் மற்றும் ஏரியின் நீரை மாசுபடுத்த கூடாது.

தூய்மை பணியாளர்களிடம் மட்கும் மற்றும் மட்கா குப்பை என, பிரித்து வழங்க வேண்டும். இவ்வாறு வழங்குவதால், கிராமத்தை தூய்மையாக வைத்திருக்கலாம். எந்தவொரு சமூக பணிகளும் உங்களுடைய வீடுகளில் இருந்து தான் ஆரம்பிக்க வேண்டும்.

குடிசை வீடுகள் இல்லா சூழ்நிலையை உருவாக்கும் வகையில், 'கலைஞர் கனவு இல்லம்' என்ற திட்டத்தின் கீழ் தகுதிவாய்ந்த பயனாளிகள் தேர்வு செய்யப்படுகின்றனர்.

போதை பழக்கத்தால் பள்ளி, கல்லூரி மாணவர்கள் சீரழிந்து வருகின்றனர். இதன் காரணமாக, இந்தியாவில் மட்டும் 10 லட்சம் பேர் வரை உயிரிழக்கின்றனர். இதில், ஒரு லட்சம் பேர் போதை பழக்கத்தால் தற்கொலை செய்து கொள்கின்றனர்.

பள்ளி, கல்லூரி அருகில் உள்ள கடைகளில், தடை செய்யப்பட்ட போதை பொருட்கள் விற்பனை செய்வதை கண்டறிந்தால், அந்த கடைக்கு 'சீல்' வைக்கப்படுவதுடன், உரிமம் ரத்து செய்யப்படும்.

இவ்வாறு அவர் பேசினார்.

கூட்டத்தில், ஊராட்சிகள் உதவி இயக்குனர் யுவராஜ், திருத்தணி ஆர்.டி.ஓ., தீபா, வேளாண் உதவி இயக்குனர் பிரேம், தாசில்தார் மலர்விழி, அரசு அலுவலர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.

Advertisement