வெள்ளபுத்துாரில் நெல் கொள்முதல் நிலையம் திறப்பு

மதுராந்தகம்:வெள்ளப்புத்துாரில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்பட்டதால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
செங்கல்பட்டு மாவட்டத்தில் சம்பா பருவத்திற்கு, தமிழ்நாடு வாணிபக் கழகத்தின் வாயிலாக அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் துவக்கப்பட்டுள்ளன.
செங்கல்பட்டு மாவட்டத்தில் 1.60 லட்சம் ஏக்கருக்கும் மேற்பட்ட விவசாய நிலங்கள் உள்ளன.
இதில் மதுராந்தகம், செய்யூர், திருக்கழுக்குன்றம் ஆகிய தாலுகாவில் அதிக அளவில் நெல் சாகுபடி செய்யப்படுகிறது.
65 ஆயிரம் ஏக்கருக்கும் மேற்பட்ட நிலப்பரப்பில், சம்பா பருவத்தில் நெல் நடவு செய்யப்பட்டு அறுவடை பணி நடந்து வருகிறது.
மத்திய அரசு சார்பில் 27 நெல் கொள்முதல் நிலையங்களும், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் சார்பாக 91 நெல் கொள்முதல் நிலையங்களும் செயல்பட்டு வருகின்றன.
நேற்று, வெள்ளப்புத்துார் ஊராட்சி மன்ற தலைவர் வரதன், துணைத் தலைவர் விஜயகுமார் தலைமையில், அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்பட்டது.