ஹிந்து ஒற்றுமை மாநாடு: ஆர்.எஸ்.எஸ்., ஏற்பாடு

24

சென்னை : ''ஆர்.எஸ்.எஸ்., என்பது அன்புக்கான இயக்கம். இதை தமிழகத்தில் சிலர் புரிந்து கொள்ளவில்லை,'' என, அதன் தென் இந்திய மக்கள் தொடர்பு செயலர் பிரகாஷ் தெரிவித்தார்.


ஆர்.எஸ்.எஸ்., அகில பாரத பொதுக்குழுக் கூட்டம், மார்ச் 21 முதல் 23 வரை பெங்களூரில் நடந்தது. அது குறித்த பத்திரிகையாளர் சந்திப்பு, சென்னை, சேத்துப்பட்டில் உள்ள, ஆர்.எஸ்.எஸ்., தலைமை அலுவலகத்தில், நேற்று நடந்தது.


அதில், தென் இந்திய மக்கள் தொடர்பு செயலர் பிரகாஷ் கூறியதாவது:தமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ்., நடத்தும், 'ஷாகா' எனப்படும் தினசரி கூடுதல், வாரக் கூடுதல் நிகழ்வுகள் அதிகரித்துள்ளன. நடப்பாண்டில், 1,368 கிளைகள் துவங்கப்பட்டு மொத்தம், 4000 கிளைகள் உள்ளன.


வங்க தேசத்தில் வசிக்கும் ஹிந்துக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய, ஐ.நா., சபை வரை செல்வது மற்றும் உலக மக்கள் அமைதியும் வளமும் பெற, ஹிந்துக்களை ஒருங்கிணைப்பது என, பெங்களூரு பொதுக்குழு கூட்டத்தில் இரண்டு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.


அன்பிற்கான இயக்கம் ஆர்.எஸ்.எஸ்., அதை அடிப்படையாகக் கொண்டு, கடந்த 100 ஆண்டுகளாக இயங்கி வருகிறது. இதை, தமிழகத்தில் சிலர் புரிந்து கொள்ளவில்லை. ஆர்.எஸ்.எஸ்., அமைப்பின் நுாறாவது ஆண்டையொட்டி, நடப்பாண்டு விஜயதசமி முதல் அடுத்த ஆண்டு விஜயதசமி வரை நிகழ்ச்சிகள் நடத்தப்பட உள்ளன.


அதாவது, ஆர்.எஸ்.எஸ்., தொண்டர்களை ஒருங்கிணைப்பது, மண்டலம், கிராமங்களில் வீடு வீடாக சென்று, 100ம் ஆண்டு விழா குறித்து விளக்குவது, ஹிந்து ஒற்றுமை மாநாடுகள் நடத்துவது, மாணவர்கள் மற்றும் இளைஞர்களை ஒன்றிணைப்பது உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடத்தப்பட உள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.


ஆர்.எஸ்.எஸ்., தென் இந்திய ஊடகச் செயலர் ஸ்ரீராம், வட தமிழக ஊடகச் செயலர் சந்திரசேகரன் உடன் இருந்தனர்.

Advertisement