பெண் தொழில்முனைவோருக்கு அடைக்கலம் தரும் ஆண்டாள்

பெண் தொழில் முனைவோர்களை தேடிச் சென்று ஊக்கமளித்து கை துாக்கி விடுகிறார் நீலகிரி மாவட்டம் குன்னுாரைச் சேர்ந்த ஆயுஷ் மருந்து தயாரிக்கும் நிறுவனர், தொழில்முனைவோர் ஆண்டாள் ஆழ்வார்சாமி.

மகன் சளி, காய்ச்சலால் அவதிப்பட்ட போது அந்த பகுதியில் உள்ள முதிய பெண்மணி காட்டில் உள்ள மூலிகைகளை பிழிந்து சாறெடுத்து கொடுத்தார். அதன் பின் மகன் உற்சாகமானதை கண்டு அந்த பெண்மணியிடம் என்ன மூலிகை என்று விசாரித்தேன். சொன்னால் மருந்து ரகசியம் போய்விடும் என்று மறுத்து விட்டார். அந்த தேடலின் விளைவு தான் சொந்தமாக மருந்து கம்பெனி தொடங்கியது' என்று ஆரம்பித்தார் ஆண்டாள். அவர் கூறியதாவது:

என்னென்ன மூலிகை எந்தெந்த நோய்களை குணப்படுத்தும் என்பது குறித்து காடு மேடு சுற்றி அலைந்து மூலிகைகளை பறித்து பத்தாண்டுகள் ஆய்வு செய்தேன். அதன் பின் ரூ.250 முதலீட்டில் தொழில் துவங்கினேன். ஆயுஷ் துறையின் கீழ் ஆயுர்வேதா லைசென்ஸ் வாங்கி மருந்துகள் தயாரிக்கிறேன்.

கால் நூற்றாண்டை கடந்த நிலையில் வெள்ளிவிழா கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக புதிதாக தொழில் துவங்கும் பெண்களுக்கு இலவசமாக வழிகாட்டுகிறேன்.

நான் தொழில் செய்ய ஆரம்பித்த காலகட்டத்தில் எனக்கு வழிகாட்டவோ சொல்லித்தரவோ ஆளில்லை. என்னைப்போல புதிதாக தொழில் செய்பவர்களை மற்றவர்களுக்கு அறிமுகப்படுத்த நினைத்தேன். ஸ்டார்ட் அப் நிறுவனங்களை முன்னிலைப்படுத்தி அவர்களது தொழில் குறித்து யூடியூப் மூலம் பேச வைக்கிறேன். எந்த நோக்கத்திற்காக தொழில் துவங்கினர், இப்போது எந்த நிலையில் உள்ளனர், அவர்களது எதிர்கால திட்டம் குறித்து 20 நிமிடங்கள் பேச வைத்து சமூகவலைதளங்களில் ஒளிபரப்புகிறோம். இதுவரை 185 தொழில்முனைவோர்களை அறிமுகப்படுத்தியுள்ளேன். இதுவரை யாரிடமும் கட்டணம் வாங்கியதில்லை.

எங்கள் நிறுவனத்தில் மாதம் ஒரு நிகழ்ச்சி நடத்துகிறேன். அதில் மாதந்தோறும் 30 தொழில் முனைவோர்களை புதிதாக அறிமுகப்படுத்துகிறேன். இளம் தலைமுறையினருக்கு தொழில் துவங்க வேண்டும் என்ற ஆசை யிருக்கிறது, அதற்கான வழி தெரியவில்லை.

ஆர்வத்தில் தொழில் துவங்கி பொருட்களை உற்பத்தி செய்து அவற்றை விற்பனை செய்வதில் தோற்கின்றனர். உற்பத்தி செய்த பொருட்களை விற்பனை செய்ய தெரியாமல் தொழிலில் இருந்து வெளியேறியோர் நிறைய பேர். விற்பனை சூத்திரம் கற்றுக் கொள் வது தான் தொழிலின் முதல் படி. அதற்கு மார்க்கெட்டிங் கற்றுக் கொள்ள வேண்டும்.

பொருள் உற்பத்தி செய்வது எளிது. எல்லோருமே உற்பத்தியா ளராக மாறினால் யார் பொருட் களை வாங்குவது. எனவே வாங்குவோர் யார் என ஆய்வு செய்ய வேண்டும். உங்களுக்கு தெரிந்தவர்களிடம் விவரங்களை கேட்டு அதற்கேற்ப உற்பத்தியை தேர்ந்தெடுக்க வேண்டும். தொழில் செய்யும் ஒவ்வொருவருக்கும் தொழிலுக்கேற்ற ஆலோசனை வழங்குகிறேன். புதிதாக தொழில் துவங்க நினைப்பவர்களுக்கும் இலவசமாக வழிகாட்டுகிறேன்.

எனது வெற்றி சூத்திரத்தை புதியவர்களுடன் பகிர்ந்து கொள்வதை பெருமையாக நினைக்கிறேன் என்றார்.

இவரிடம் ஆலோசனை பெற 99444 63106.

Advertisement