சோமசேகர், ஹெப்பார் மீது விரைவில் நடவடிக்கை?

ஹூப்பள்ளி: “பசனகவுடா பாட்டீல் எத்னாலை தொடர்ந்து, எம்.எல்.ஏ.,க்கள் சோமசேகர், சிவராம் ஹெப்பாரும் கட்சியில் இருந்து நீக்கப்படலாம்,” என, ஒழுங்கு நடவடிக்கை குழுத் தலைவர் லிங்கராஜ் பாட்டீல் சூசகமாக கூறி உள்ளார்.

ஹூப்பள்ளியில் நேற்று அவர் அளித்த பேட்டி:

பா.ஜ., ஒழுக்கமான கட்சி. எங்களுக்கு தனிநபரை விட கட்சி தான் முக்கியம். பல முறை எச்சரிக்கை கொடுத்தும் பசனகவுடா பாட்டீல் எத்னால் கேட்கவில்லை. இதனால் கட்சியில் இருந்து ஆறு ஆண்டுகள் நீக்கப்பட்டுள்ளார். இது கட்சிக்கு எதிராக பேசுபவர்களுக்கு எச்சரிக்கை மணி.

எம்.எல்.ஏ.,க்கள் சோமசேகர், சிவராம் ஹெப்பார் காங்கிரசுக்கு ஆதரவாக செயல்படுகின்றனர். அவர்களுக்கு மத்திய ஒழுங்கு நடவடிக்கை குழு நோட்டீஸ் அனுப்பி உள்ளது. அவர்கள் என்ன விளக்கம் அளிக்கின்றனர் என்று பார்க்கலாம். சரியான விளக்கம் அளிக்காவிட்டால் அடுத்தகட்ட நடவடிக்கையை கட்சி மேலிடம் எடுக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

புறக்கணிப்பு

நான் கட்சி விரோத நடவடிக்கையில் ஈடுபடவில்லை. அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்பது கட்சி விரோத நடவடிக்கை இல்லை. காங்கிரசில் சேரும் எண்ணம் இல்லை. 2028 சட்டசபை தேர்தலின்போது, எங்கிருந்து போட்டியிடுவது என்று முடிவு செய்வேன். பா.ஜ., தலைவர்கள் என்னை எந்த கூட்டத்திற்கும் அழைப்பது இல்லை. தேர்தல் பிரசாரத்திற்கும் அழைக்காமல் புறக்கணித்தனர்.

சோமசேகர்

ஏன் நோட்டீஸ் இல்லை?

கட்சி ஒழுங்கு நடவடிக்கை குழு அனுப்பிய நோட்டீஸ் எனக்கு கிடைத்துள்ளது. அதற்கு பொருத்தமான பதில் அளிப்பேன். நான் கட்சி விரோத நடவடிக்கையில் ஈடுபடவில்லை. எனக்கு கட்சியில் அநீதி நடந்தது. எங்களை துாண்டிவிட்டவர்களுக்கு எந்த நோட்டீசும் கொடுக்கவில்லை.

சிவராம் ஹெப்பார்

Advertisement