சித்தராமையா அரசை கண்டித்து கோலார் பா.ஜ., போராட்டம்

கோலார்: சிறுபான்மையினர் நலனுக்காக அரசியலமைப்பு சட்டத்தை மாற்றும் முதல்வர் சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் அரசின் திட்டத்தை கண்டித்து, கோலாரில் நேற்று பா.ஜ.,வினர் போராட்டம் நடத்தினர்.

கோலார் மணிக்கூண்டு சதுக்கத்தில் மாவட்டத் தலைவர் ஓம் சக்தி சலபதி தலைமையில் மாவட்ட பா.ஜ.,வினர் ஊர்வலம் நடத்தினர். காங்கிரஸ் அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.

அப்போது போலீசாருக்கும், பா.ஜ.,வினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

போராட்டத்தின்போது, முன்னாள் எம்.பி., முனிசாமி பேசியதாவது:

கர்நாடக மாநிலத்தில் சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் அரசு அரசியலமைப்பு சட்டத்தை மீறும் போக்கில் செயல்படுகிறது.

சித்தராமையாவின் நிழல்களாக உள்ள நசீர் அகமது, ஜமீர் அகமது, தன்வீர் சேட் உட்பட முஸ்லிம் எம்.எல்.ஏ.,க்கள் அவர்களின் வசதிக்காகவே ஆட்சியை நடத்துகின்றனர்.

கர்நாடகாவில் 6 கோடி மக்களின் ஆட்சியாக இல்லாமல், தனிப்பட்ட ஒரு மதத்தினர் நலனுக்காக ஆட்சி நடத்துவதாக தெரிகிறது. இது பாகிஸ்தான் அல்ல. இது ஹிந்துஸ்தான். இதை முதல்வர் சித்தராமையா மறக்கக் கூடாது.

அனைத்து மக்களையும் அம்பேத்கர் எழுதிய அரசியலமைப்பு சட்டத்துக்கு உட்பட்டு, அரவணைத்து செல்லும், நாட்டின் பிரதமர் நரேந்திர மோடியிடம் பாடம் கற்றுக் கொள்ள வேண்டும்.

அரசியலமைப்பை ஒரு மதத்தினருக்காக திருத்தம் செய்து மாற்றுகிற திட்டத்தை முதல்வர் சித்தராமையா கைவிட வேண்டும். அரசியலமைப்பு சட்டத்தை மீறும் காங்கிரஸ் போக்கை பா.ஜ., ஒருபோதும் ஏற்காது. இதற்காக தொடர்ந்து போராட்டம் நடத்தும்.

இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement