பா.ஜ.,வில் இருந்து எம்.எல்.ஏ., எத்னால் நீக்கம்

பெங்களூரு: கட்சியின் ஒழுக்கத்தை மீறியதாக, எம்.எல்.ஏ., பசனகவுடா பாட்டீல் எத்னால், கட்சியில் இருந்து ஆறு ஆண்டுகள் நீக்கப்பட்டுள்ளார்.
விஜயபுரா தொகுதி பா.ஜ., - எம்.எல்.ஏ., பசனகவுடா பாட்டீல் எத்னால், 61. மூத்த தலைவரான இவர், மத்திய அமைச்சராகவும் பணியாற்றியவர். 2023 சட்டசபை தேர்தலுக்கு பின், கர்நாடக பா.ஜ., தலைவர் பதவி அல்லது சட்டசபை எதிர்க்கட்சித் தலைவர் பதவி எதிர்பார்த்தார். இரண்டுமே கிடைக்கவில்லை. இதனால் மேலிடம் மீது அதிருப்தி அடைந்தார்.
பா.ஜ., தலைவராக நியமிக்கப்பட்ட விஜயேந்திராவை, தொடர்ந்து விமர்சித்து வந்தார். கட்சி மேலிட தலைவர்களையும் அவ்வப்போது விமர்சனம் செய்தார்.
இதனால் கடந்த மாதம் 10ம் தேதி பா.ஜ., மத்திய ஒழுங்கு நடவடிக்கை குழு, எத்னாலுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியது. “இந்த நோட்டீசிற்கு விளக்கம் அளிக்க மாட்டேன்,” என ஊடகம் முன்னிலையில் அவர் கூறினார்.
நன்னடத்தை
ஆனால் கட்சி மேலிடத்துக்கு அவர் விளக்கம் அளித்த விஷயம், அம்பலமானது. “கட்சிக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் பொது இடத்தில் பேச மாட்டேன்,” என, அவர் உத்தரவாதம் அளித்திருந்தார்.
அதன் பின், சில நாட்கள் அமைதியாக இருந்தவர், மீண்டும் விஜயேந்திராவுக்கு எதிராக பேச ஆரம்பித்தார். இதை எல்லாம் கவனித்து வந்த மத்திய ஒழுங்கு நடவடிக்கை குழு, பா.ஜ.,வில் இருந்து எத்னாலை ஆறு ஆண்டுகள் நீக்கி நேற்று உத்தரவு பிறப்பித்தது.
அந்த உத்தரவில், 'எத்னால் பெயர், முகவரி குறிப்பிடப்பட்டு இருந்தது. பிப்ரவரி 10ம் தேதி அனுப்பிய ஷோ காஸ் நோட்டீசிற்கு நீங்கள் அளித்த பதிலை, கட்சியின் மத்திய ஒழுங்கு நடவடிக்கை குழு பரிசீலித்தது.
நன்னடத்தை உறுதி அளித்த போதிலும், நீங்கள் மீண்டும், மீண்டும் கட்சியின் ஒழுக்கத்தை மீறியதை தீவிரமாக கவனித்துள்ளோம்.
இதனால் கட்சியின் முதன்மை உறுப்பினர் பதவியில் இருந்து ஆறு ஆண்டுகளுக்கு உங்களை நீக்க முடிவு செய்யப்பட்டுள்ளது' என கூறப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்பு வெளியானபோது, எத்னால் டில்லியில் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. எத்னால் கட்சியில் இருந்து நீக்கப்பட்டதை சில இடங்களில், பட்டாசு வெடித்து பா.ஜ., தொண்டர்கள் கொண்டாடினர்.
பசனகவுடா பாட்டீல் எத்னாலை, பா.ஜ., கட்சியில் இருந்து நீக்கியது இது முதல்முறை அல்ல. 2015ம் ஆண்டு கட்சி மேலிடம் உத்தரவையும் மீறி எம்.எல்.சி., தேர்தலில் போட்டியிட்டதால், ஆறு ஆண்டுகள் நீக்கப்பட்டார். ஆனால் 2018ல் மீண்டும் கட்சியில் சேர்த்துக் கொள்ளப் பட்டார்.
இதுகுறித்து தன் 'எக்ஸ்' பக்கத்தில் எத்னால் வெளியிட்ட பதிவு:வாரிசு அரசியல், ஊழல், கட்சிக்குள் சீர்திருத்தங்கள், தனி மனித ராஜ்யம், கர்நாடகாவின் வடக்கு பகுதிகளை அபிவிருத்தி செய்ய கோரியதற்காக, என்னை கட்சியில் இருந்து ஆறு ஆண்டுகள் நீக்கி உள்ளனர். சில சுயநலவாதிகள் தங்கள் நிகழ்ச்சி நிரலை வெற்றிகரமாக முன்னெடுப்பதில் வெற்றி பெற்றுள்ளனர்.என்னை கட்சியில் இருந்து நீக்கினாலும் ஊழல், குடும்ப அரசியலுக்கு எதிரான போராட்டம்; ஹிந்துத்துவாவுக்கு ஆதரவான எனது போராட்டம் தடைபடாது. கட்சி தொண்டர்கள், என் நல விரும்பிகள், நண்பர்கள், சுவாமிகள், ஊடகங்கள், குடும்பத்தினருக்கு என் நன்றி.இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.
தன் 'எக்ஸ்' பக்கத்தில் பா.ஜ., தலைவர் விஜயேந்திராவின் பதிவு:ஒழுக்கம், தியாகத்திற்கு பா.ஜ., கட்சி எப்போதும் முதலிடம் அளிக்கிறது. பசனகவுடா பாட்டீல் எத்னாலின் பேச்சுகளை நீண்ட காலம் கவனித்த பிறகு, அவரை கட்சியில் இருந்து நீக்கி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இது தவிர்க்க முடியாத நடவடிக்கை. எனக்கு ஏற்பட்ட கசப்பான சம்பவம் குறித்து ஒருபோதும் நான் புகார் அளித்ததில்லை.என் தந்தை எடியூரப்பா வழியில் அனைவரையும் சமமாக நடத்துகிறேன். பெரியவர்கள் வழிகாட்டுதலின்படி கட்சியை வளர்க்கிறேன். நாம் அனைவரும் ஒருங்கிணைந்து ஊழல் நிறைந்த காங்கிரஸ் அரசை விரட்டுவோம். வளமான கர்நாடகாவை கட்டியெழுப்ப, பிரதமர் நரேந்திர மோடிக்கு ஆதரவு அளிப்போம்.இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.
மேலும்
-
ஈரோட்டில் ஆசிட் டேங்கர் சுத்தம் செய்தபோது விபரீதம்; 2 பேர் உயிரிழப்பு
-
ஆப்கன் தலிபான்கள் கஸ்டடியில் இருந்த அமெரிக்கப் பெண் விடுதலை
-
நாக்பூரில் ஆர்.எஸ்.எஸ்., நிறுவனர் சிலைக்கு பிரதமர் மோடி மரியாதை
-
காற்று மாசு மூலம் பரவும் நோய்கள்; 2040க்குள் 50 சதவீதம் தடுக்க உலக நாடுகள் உறுதி
-
பல் வரிசை சீரமைப்பு சிகிச்சையில் விபரீதம்: நாக்கை துளைத்த டாக்டர் மீது இளம்பெண் போலீசில் புகார்
-
சென்னை மக்களுக்கு நல்ல செய்தி: பூண்டி வந்தது கிருஷ்ணா நதி நீர்