சிறுபான்மை, பெரும்பான்மை என பிரித்தாளும் தி.மு.க.,வின் அரசியல்; வானதி குற்றச்சாட்டு

1

சென்னை: "மக்களுடைய பிரச்னையில் கவனம் செலுத்துவதை விட்டு விட்டு, மத்திய அரசுக்கு எதிராக ஏதாவது ஒரு தீர்மானத்தை கொண்டு வந்து மக்களை திசைதிருப்ப முயற்சிக்கிறார்கள்" என்று பா.ஜ., எம்.எல்.ஏ., வானதி குற்றம்சாட்டியுள்ளார்.

மத்திய அரசின் வக்பு வாரிய சட்டத்திருத்தத்திற்கு எதிராக சட்டப்பேரவையில் தி.மு.க., அரசு கொண்டு வந்த தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பா.ஜ., வெளிநடப்பு செய்தது.

பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய பா.ஜ., எம்.எல்.ஏ., வானதி கூறியதாவது; நாடு முழுவதும் உள்ள முஸ்லீம் மக்கள், தங்களுடைய வக்பு சொத்துக்கள் முறையற்ற வகையில் நிர்வாகம் செய்யப்படுவதற்கும், உண்மையாக யார் அந்த பலனை பெற வேண்டுமோ, அவர்களுக்கு கிடைக்க வழிவகை செய்ய சீர்திருத்தம் மேற்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கையின் அடிப்படையில் இந்த சட்டத்திருத்த மேற்கொள்ளப்பட்டது.

சமூக நீதி பேசுகின்றன தி.மு.க., அரசு ஒன்றை மறந்திருக்கிறார்கள். புதிதாக கொண்டுவரக்கூடிய மத்திய அரசின் சட்டத்திருத்தத்தின்படி, வக்பு சொத்துக்களை நிர்வாகம் செய்வதில், முஸ்லிம் சமூகத்தில் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவர்களுக்கு இடஒதுக்கீடு உண்டு. அதேபோல, பெண்களுக்கு இடஒதுக்கீட்டை கொண்டு வருகிறது பா.ஜ., அரசு. இவற்றை எல்லாம் எதிர்த்து, பழைய முறையிலேயே இருக்க வேண்டும் என்பதற்காகவும், தி.மு.க., அரசு ஒவ்வொரு நாளும் புதிது புதிதாக கணக்குகளை போடுகின்றனர்.

மக்களுடைய பிரச்னையில் கவனம் செலுத்துவதை விட்டு விட்டு, மத்திய அரசுக்கு எதிராக ஏதாவது ஒரு தீர்மானத்தை கொண்டு வந்து மக்களை திசைதிருப்ப முயற்சிக்கிறார்கள். முஸ்லிம், கிறிஸ்துவம் மற்றும் ஹிந்து மக்களுக்கும் அரசியலமைப்பு சமமான உரிமைகளை வழங்கியிருக்கிறது.ஒரு மதத்தினரின் வழிபாடு செய்வதில் எந்த பிரச்னையும் கிடையாது. சட்டம் அதை முழுமையாக அனுமதிக்கிறது. மத்திய அரசு பாதுகாக்கிறது.

ஆனால், ஹிந்து மக்களுக்காக அவர்கள் நிர்வாகம் செய்யும் கோவில்களுக்கு ஒரு அமைச்சரை நியமனம் செய்து விட்டு, தற்போது மத சுதந்திரம் குறித்து முதல்வர் ஸ்டாலின் எங்களுக்கு பாடம் எடுத்து வருகிறார்.

இன்று தீர்மானத்தின் முன்பாக முதல்வர் பேசியதை கூர்ந்து கவனித்தால் தெரியும். இந்தியாவில் உள்ள வக்பு சொத்துக்களும் நேர்மையான வழியில் வெளிப்படையான முறையில் நிர்வாகம் செய்வதற்காக, நாடு முழுவதும் பார்லிமென்ட் கூட்டுக்குழு கருத்துக்களை கேட்டு, இந்த சட்டத்திருத்தத்தை கொண்டு வந்துள்ளது. தி.மு.க.,வின் வழக்கமான, சிறுபான்மை, பெரும்பான்மை என்று பிரித்து பார்த்து அரசியல் செய்வதற்காக, தீர்மானத்தை கொண்டு வந்துள்ளது. இதனை பா.ஜ., எதிர்ப்பதாக சொல்லிவிட்டு வெளிநடப்பு செய்துள்ளோம், இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement